நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவியால் சாதித்த தமிழன்!

மாற்றுத்திறனாளிக்களுக்கான கிரிக்கெட் போட்டியில் சாதித்த தமிழகத்தை சேர்ந்த வீரருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மதுரையை சேர்ந்த சச்சின் சிவா என்பவர் மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழ்நாடு கிரிக்கெட் போட்டியின் தலைவராகவும், இந்திய மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியின் விளையாட்டு வீரராகவும் உள்ளார்.

இந்திய மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 கிரிக்கெட் போட்டி நேபாளத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் தனியார் அமைப்புகளின் உதவியுடன் நேபாளம் சென்றார் சிவா.

அங்கு நடந்த தொடரில் 3 – 0 என்ற கணக்கில் 3- டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மாற்றுத்திறனாளிக்கான கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது.

முதன்முதலாக மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த சச்சின் சிவா கலந்து கொண்டார்.

முதன்முதலாக இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய காரணத்தினால் தனது சொந்த ஊரில் கோப்பையை காண்பிப்பதற்காக அவருக்கு கோப்பை வழங்கப்பட்டு நேற்று மதுரை வந்தடைந்த அவருக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது.

பின் செய்தியாளர்களைச் சந்தித்த சச்சின் சிவா கூறுகையில், நேபாளில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் இந்தியா வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

முதல்முறையாக இந்திய அணிக்காக விளையாடிய காரணத்தினால் வாங்கிய கோப்பையை அனைவரிடமும் காட்டுவதற்காக இங்கு கொண்டு வந்துள்ளேன்.

இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள், முக்கியமாக நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் தற்போது நான் ஒருவர் மட்டுமே தேர்வாகி உள்ளேன்.

இதுபோல் பல பேர் தேர்வாக வேண்டும், இன்னும் 2 மாதங்களில் இலங்கையில் நடைபெறவிருக்கின்ற போட்டியில் பங்கேற்க உள்ளேன். இந்த முறை நன்றாக விளையாடிய காரணத்தினால் எனக்கு அதில் இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.