மலையக மக்களை ஏமாற்றி அரசாங்கத்துடன் இணைந்து சரணாகதி அரசியல் நடத்தும் தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை விமர்சிக்காவிட்டால் அரசியல் பிழைப்பு நடத்தமுடியாது. இதனாலேயே ஆறுமுகன் தொண்டமான் தும்மினால்கூட அதையும் கண்டித்து அறிக்கை விடுக்கும் நிலைக்கு கூட்டணியினர் தள்ளப்பட்டுள்ளனர் என்று கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 140 ரூபா கொடுப்பனவு பெற்றுக்கொடுப்போம். அவ்வாறு இல்லாவிட்டால் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவோம் என முற்போக்கு கூட்டணியினர் வீராப்பு பேசினர். ஆனால், 140 ரூபா வழங்கப்படவில்லை.
அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து கொடுப்பனவை பெறுவதற்கு முதுகெலும்பற்ற கூட்டணியினர், வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக 50 ரூபா கிடைக்கும் என்றனர். அரசாங்கத்திலிருந்து வெளியேறப் போவதாகவும் பிரமாண்டமாக அறிவிப்பு விடுத்தனர். ஆனால், இன்னும் அந்த 50 ரூபா கிடைக்கவில்லை. இதன்மூலம் அவர்களின் அரசியல் வங்குரோத்து நிலை அம்பலமாகியுள்ளது.
இந்நிலையிலேயே இயலாமையைமூடி மறைப்பதற்காக கொட்டகலை விமான நிலைய விவகாரத்தை தூக்கிப்பிடித்து, இ.தொ.காவுக்கு சேறுபூசும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
கொட்டகலையில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என நாம் ஒருபோதும் கூறவில்லை. சீ பிளேன் திட்டம்- உள்ளுர் விமான நிலையத்தை அமைக்கலாம். அதற்கு எதுவும் தடையாக இல்லை. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதற்கான ஆரம்பக்கட்ட பணிகளையும் முன்னெடுத்திருந்தது. வாருங்கள் இடத்தை வேண்டுமானாலும் காட்டுகின்றோம் என்றார்.