கோவாவில் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை தங்கள் கட்சிக்குள் இழுக்க, பாஜ கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக , அம்மாநில காங்., தலைவர் கிரிஷ் சோடங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தெற்கு கோவாவில் நேற்று (செப்., 29) நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜ மாநிலங்களவை எம்.பி., சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், பாஜ.,வில் சேர்ந்த புதியவர்களின் பதவி தற்காலிகமானது.
ஏமாற்றமடைந்த கட்சி நிர்வாகிகளுக்கு விரைவில் அவர்களுக்கான உரிமை கிடைக்கும் என பேசியிருந்தார்.
இதற்கு பதிலளித்த கோவா மாநில காங்., தலைவர் கிரிஷ் சோடங்கர், கடந்த ஜூலை மாதம், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய 10 எம்.எல்.ஏ.,க்களுக்கும் இது முடிவின் தொடக்கம் எனக் கூறினார்.
கிரிஷ் சோடங்கர் கூறியதாவது: உண்மையில், பாஜ மக்களைப் பயன்படுத்திக் கொண்டு பின்னர் வீசி எறிகிறது. சுப்பிரமணியன் சுவாமி தனது கருத்துக்களில் பாஜவின் உள் எண்ணங்களை தான் வெளிப்படுத்தியுள்ளார்.
சிலருக்கு பணமும், சிலருக்கு நிறுவனங்கள், அமைச்சகங்கள் என வழங்கப்பட்டுள்ளன. இந்த 10 எம்.எல்.ஏ.க்களை இழுப்பதற்காக ரூ. 300 கோடியும் செலவிட்டுள்ளனர்.
அந்த 10 பேருக்கு இது முடிவின் தொடக்கம். அதை அவர்கள் உணர்வார்கள். இவ்வாறு கிரிஷ் சோடங்கர் கூறினார்.
2017ல் நடந்த கோவா சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 40 இடங்களில் 17 எம்.எல்.ஏ.,க்களை கொண்டு பெரிய கட்சியாக இருந்த காங்., கட்சி, தற்போது வெறும் 5 எம்.எல்.ஏ.,க்களை மட்டுமே கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.