இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, தனக்கு ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு குறித்து வல்லுநர்களிடம் ஆலோசனை பெற பிரித்தானியா பயணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக, கீழ் முதுகு பகுதியில் எலும்பு முறிவால் பாதிக்கப்பட்ட பும்ராவுக்கு இரண்டு மாதங்கள் ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால், தென் ஆப்பரிக்கா மற்றும் எதிர்வரும் வங்க தேச அணிக்கு எதிரான தொடர்களில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.
இது பும்ராவின் 3 ஆண்டு சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பெரிய காயமாகும். இந்நிலையில், பிசிசிஐ பும்ராவை சிகிச்சைக்காக லண்டன் அனுப்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பும்ராவுக்கு உதவியாக தேசிய கிரிக்கெட் அகாடமியின் பிசியோதெரபிஸ்ட் ஆஷிஷ் கவுசிக் உடன் செல்லவுள்ளார். பல ஆலோசனைகளைப் பெற மூன்று வெவ்வேறு நிபுணர்களை சந்திக்க பிசிசிஐ முறையான ஏற்பாடு செய்துள்ளது என மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் அக்டோபர் 6 அல்லது 7ம் திகதி பும்ரா லண்டன் பயணிக்க உள்ளார். அவர் அங்கு சுமார் ஒரு வாரம் தங்கி ஆலோசனை பெறுவார். நிபுணர்களின் ஆலோசனை அடுத்து அவருக்கான அடுத்த கட்ட சிகிச்சை குறித்து முடிவெடுக்கப்படும் என பிசிசிஐ அதிகாரி தெரவித்துள்ளார்.