இல்லாத விடுதிக்கு இணையத்தளத்தில் 12,000 டொலர் செலுத்திய பிரித்தானிய தம்பதி!

பிரித்தானியாவை சேர்ந்த தம்பதி, இல்லாத Airbnb விடுதிக்கு 12,000 டொலர் செலுத்தி ஏமாந்துள்ளனர்.
ஸ்பெயினின் இபிஸா தீவில் உள்ள சொகுசு Airbnb விடுதிக்குப் பதிவு செய்தனர் இயன் ஃபெல்த்தம், அவரின் மனைவி டெனிஸ்.
ஆனால் இருவரும் விடுதி இருக்கும் இடத்திற்குச் சென்றபோது அவர்கள் பதிவுசெய்த இடம் போலி என்று அறிந்தனர்.
இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட விடுதியின் படங்கள் அனைத்தும் அவர்கள் தங்கவிருந்த பகுதியில் உள்ள விடுதிகளின் படங்கள் என்று அறிந்தனர்.
தம்பதி தங்கள் சுற்றுப்பயண அசம்பாவிதத்தைப் பற்றி The Sunday Times நாளிதழில் பேட்டி வெளியிட்டதைத் தொடர்ந்து Airbnb இணையத்தளத்தில் போலி விடுதியைப் பற்றிய பக்கம் அகற்றப்பட்டது.
பயணத்துக்கு முன் சில ஐயங்கள் இருந்ததாகவும் அது குறித்து Airbnb நிறுவனத்தை நாடியதாகவும் திரு இயன் கூறினார். நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள் தம் ஐயங்களைத் தீர்க்கவில்லை என்றார் அவர்.
சம்பவத்தைத் தொடர்ந்து Airbnb நிறுவனம் தம்பதியின் பணத்தைத் திரும்பக் கொடுத்துள்ளது.