யாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டிய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 5 பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
ஆலடிவீதி, உடுவில் பகுதியினை சேர்ந்த சுமன்ராஜ் சுதர்சினி (வயது 28) என்ற இளம் தாயொருவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 25ஆம் திகதி இரவு முற்றத்தில் வைத்து கணவனுக்கு சுதர்சினி உணவு பரிமாறிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் புடையண்பாம்பு தீண்டியுள்ளது.
பாம்பு தீண்டியதை கண்ட கணவன் உடனடியாக மனைவிக்கு முதலுதவி செய்த பின் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கிருந்து கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தொடர்ச்சியாக சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் குறித்த பெண் நேற்று மாலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்ணின் இறப்பு தொடர்பான விசாரணையினை வைத்தியசாலையின் திடீர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்ட நிலையில் உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைகப்பட்டுள்ளது.
இதேவேளை உயிரிழந்த பெண்ணுக்கு ஒரு வயதில் ஒரு குழந்தை ஒன்றும் உள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.