சீனாவில் முன்னாள் மேயர் ஜாங் குய் வீட்டில் 13½ டன் தங்கம் பறிமுதல்.

சீனாவின் ஹைனன் மாகாண தலைநகரான ஹாய்காவ் நகரின் மேயராக 2008 முதல் 2010 வரை இருந்தவர் ஜாங் குய். மேலும் இவர் கம்யூனிஸ்டு கட்சி குழுவின் ஹாய்காவ் நகர செயலாளராகவும் இருந்து வந்தார். ஜாங் குய், தனது பதவி காலத்தில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து அந்நாட்டின் ஊழல் தடுப்பு பிரிவு விசாரித்து வருகிறது.

 இந்த நிலையில், அண்மையில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஹாய்காவ் நகரில் உள்ள ஜாங் குய் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் கீழ் தளத்தில் உள்ள ஒரு ரகசிய அறையில் குவியல் குவியலாக தங்க பிஸ்கட்டுகள், நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அமெரிக்க டாலர்கள், சீன யுவான் மற்றும் ஐரோப்பிய யூரோ என கட்டுகட்டாக பணமும் சிக்கியது.

மொத்தமாக 300 மில்லியன் பவுண்ட் மதிப்புடைய 13½ டன் எடை கொண்ட தங்க பிஸ்கட்டுகள் மற்றும் நகைகளையும், 30 பில்லியன் பவுண்ட் பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஜாங் குய் மீதான பொருளாதார குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.