கடந்த மாதம் 15-ஆம் தேதி, மதுரைகொட்டாம்பட்டி அருகே உள்ள சாவரப்பட்டி என்ற பகுதியில் உள்ள கால்வாயில் அழுகிய நிலையில் உடல் ஒன்று கிடந்துள்ளது. காவல் துறை விசாரணையில் அது சென்னை அசோக் நகரில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் 9 ஆண்டுகளாக டிரைவராக வேலை பார்த்து வரும் ராமநாதபுரத்தை சேர்ந்த நாகநாதன் (51 வயது) என்பது தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து விசாரணை நடத்திய காவல் துறைக்கு குற்றாலம் செல்வதற்காக காரை, புக் செய்த சென்னையைச் சேர்ந்த ஜெயசுதா, என்ற இளம் பெண் திடீரென தலைமறைவான சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவரை திருச்சியில் கண்டறிந்து கைது செய்தனர்.
விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ஜெயசுதாவின் பக்கத்து வீட்டில் குடியிருக்கும், பெரோஸ் அகமது என்பவர் பணப்பிரச்சனையில் இருந்த ஜெயசுதாவிடம், காரை கடத்தி விற்று சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதன் காரணமாக ஜெயசுதா, புதுச்சேரி ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தன்னுடன் வேலை செய்த ஜெகதீஷ் மற்றும் காதலன் ஹரிகரன் ஆகியோரை சந்தித்து திட்டம் தீட்டி இருக்கின்றார்.
ஜெயசுதா, சென்னை தனியார் டிராவல்ஸ் ஒன்றில் குற்றாலம் செல்ல வேண்டும் எனக் கூறி, காரை புக் செய்துள்ளார். இந்த காரை நாகநாதன் ஓட்டி இருக்கின்றார். இந்த நிலையில் குற்றாலத்தில் இருந்து, சென்னை திரும்பும் வழியில், நாகநாதனை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்து, கால்வாயில் தூக்கி வீசி, காரை கடத்தி சென்றுள்ளனர்.
உறையூரில் காரின் கலர் மற்றும் நம்பர் பிளேட் ஆகியவற்றை மாற்ற பெயின்டர் ஒருவரிடம் காரை விட சந்தேகமடைந்த பெயின்டர், உள்ளூர் காவல்துறைக்கு தகவல் கொடுக்க, நான்கு பேரையும் அவர்கள் விரைந்து வந்து கைது செய்துள்ளனர்.