சங்கரன்கோவில் அருகில் தன் மகளை கிண்டல் செய்து பின்தொடர்ந்து வந்த இளைஞனை, தந்தை அரிவாளால் வெட்டி கொலை செய்திருக்கிறார்.
நெல்லை மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் அருகே டி.ராமநாதபுரத்தை சேர்ந்த 21 வயதான கண்ணன் என்பவர் அதே பகுதியில் வசித்து வரும் ஜெயகுட்டி என்பவரின் மகளை ஒருதலையாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இதை தெரிந்து கொண்டு ஜெயக்குட்டி, கண்ணனை கண்டிக்கும்படி அவரது தாயாரிடம் புகார் அளித்ததோடு, வாசுதேவநல்லூர் காவல்நிலையத்திலும் புகார் அளித்திருக்கிறார்.
இது தொடர்பாக காவல்நிலையத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கண்ணன் தொடர்ந்து அவரது மகளை பின் தொடர்ந்து கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயக்குட்டி, கண்ணனை நேரில் அழைத்து கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, வாய்ப்பேச்சு கைகலப்பாக மாறியது.
இதில் ஜெயக்குட்டி தன்னிடம் இருந்த அரிவாளை எடுத்து கண்ணனை சரமாரியாக வெட்டி கொன்றார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வாசுதேவநல்லூர் போலீஸார், கண்ணனின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ஜெயக்குட்டியை கைது செய்த போலீஸார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.