இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் முதல் டெஸ்ட் போட்டி விசாகபட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், மயங்க் அகர்வால் 215 ரன்களும், ரோகித் சர்மா 176 ரன்கள் அடிக்க இந்திய அணி 7 விக்கெட்டுளுக்கு 502 ரன்களை எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு, டீன் எல்கர் 160 ரன்கள், டி காக் 111 ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா அணி 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தனது 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது. மயங்க் அகர்வால் இந்த இன்னிங்சில் 7 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளிக்க அவரை தொடர்ந்து வந்த புஜாரா 81 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.
முதல் இன்னிங்சில் 176 ரன்களை அடித்த ரோஹித், இந்த இன்னிங்சிலும் சதமடித்து அசத்தியுள்ளார். 133 பந்துகளில் 10 பவுண்டரிகள் 4 சிக்சருடன் அவர் சதத்தினை அடித்துள்ளார்.
இந்த போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்ததன் மூலம் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஒருவர் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடிக்கும் இரண்டாவது வீரராக ரோகித்சர்மா இடம்பெற்றுள்ளார். ஏற்கனவே இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக விளையாடியுள்ள சுனில் கவாஸ்கர் மூன்று முறை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி ஒரு டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்துள்ளார்.
சுனில் கவாஸ்கர் v வெஸ்ட் இண்டீஸ் , போர்ட் ஆப் ஸ்பெயின், 1971
சுனில் கவாஸ்கர் v பாக்கிஸ்தான், கராச்சி, 1978
சுனில் கவாஸ்கர் v வெஸ்ட் இண்டீஸ், கொல்கத்தா, 1978
ரோஹித் சர்மா v சவுத் ஆப்பிரிக்கா , விசாகபட்டினம், 2019*
ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் 2013 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக களமிறங்கினார். அந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், இந்திய அணி இரண்டு போட்டியிலும் ஒரு இன்னிங்ஸ் மட்டுமே விளையாடியது. அந்த இரண்டு இன்னிங்சிலும் ரோகித் சர்மா சதம் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இந்த போட்டியில் தன்னுடைய முதல் 2 இன்னிங்ஸ் அவர் சதம் அடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் சார்பில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா இடம்பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர் மூன்று முறையும், ராகுல் டிராவிட் இரண்டு முறையும், விஜய் ஹசாரே ஒருமுறை அடித்துள்ளனர். தற்போது அணியில் விளையாடி வரும் கோலி ரகானே தலா ஒரு முறை அடித்துள்ள நிலையில் தற்போது ரோஹித்தும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்
கவாஸ்கர் – 3 முறை
டிராவிட் – 2 முறை
விஜய் ஹசாரே – 1 முறை
கோலி – 1 முறை
ரஹானே – 1 முறை
ரோஹித் – 1 முறை