முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையாா் ஆலய வளாகத்திற்குள் அடாத்தாக அமைக்கப் பட்ட விகாரையின் விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரர் கடந்த சில தினங்களிற்கு முன்னர் உயிரிழந்திருந்தார்.
இந்த நிலையில் குறித்த விகாரைக்கு பௌத்த கடும்போக்குவாத பீடமான அமரபுர நிக்காயா புதிய விகாராதிபதி ஒருவரை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விகராதிபதி நியமிக்கப்பட்டு ஒரு வாரமாகும் நிலையில் அவர் விகாரைக்கு இன்னும் வரவில்லை எனவும் கூறப்படுகின்றது.
திருகோணமலை மலைக் கிராமமான மிகிந்தபுர என்ற இடத்தைச் சேர்ந்த ரத்தன தேவ கீர்த்தி என்ற பௌத்த பிக்குவே இவ்வாறு சர்ச்சைக்குரிய நீராவியடி விகாரைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பிக்கு ஆசிரியர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அவருக்கான நியமனம் வழங்கப்பட்டு ஒருவாரமாகியும் அவர் நீராவியடி விகாரைக்கு இன்னும் வரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை முல்லைத்தீவு நீதிமன்றில் விகாரையின் பொறுப்பானவர் அடுத்த வாரம் நீதிமன்றில் முற்படுத்த காத்திருக்கும் பொலிஸாருக்கு புதிய விகாராதிபதியின் வருகை எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.