பழம் பெரும் வோக் -பத்திரிகையில் இடம் பிடித்த முதல் தென்னிந்திய நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார் நயன்தாரா.
பிரபலமான வோக் பத்திரிகையில் இடம் பெறுவதற்கு மாடலிங் துறையில் ஈடுபட்டுள்ளவர்களிடையே போட்டி நிலவுவதுண்டு. மாடலிங் துறையில் இருப்பவர்கள் மட்டுமல்லாது திரைத்துறையில் இருப்பவர்களும் இந்த பத்திரிகையில் இடம் பெறுவதை பெருமையாக கருதுவர்.
இது வரையில் வட இந்தியாவில் உள்ளவர்களை மட்டுமே பிரபலப்படுத்தி வந்துள்ள வோக் பத்திரிகை தற்போது தென்னிந்தியா பக்கம் தனது பார்வையை திருப்பி உள்ளது. மேலும் வடஇந்திய பிரபலங்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற வரலாறை உடைத்துள்ளார் நடிகை நயன்தாரா.
அக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட்ட இதழில் தென்னிந்திய நடிகர்களான மகேஷ்பாபு மற்றும் துல்கர் சல்மான் இடம் பெற்றுள்ளனர். அவர்களுடன் நயன்தாராவும் இடம் பெற்றுள்ளார். தென்னிந்திய நடிகைகளில் இடம்பெற்றுள்ள ஒரே நடிகை இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் அளித்த பேட்டியும் பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது.
அதில் அவர் கூறி இருப்பதாவது: நான் ரிஸ்க் எடுக்க துணிந்தவள். முன்னணி நாயகியாக இருந்த போதிலும் வெற்றியை என் தலைக்கு ஏற்ற மாட்டேன். உண்மையை சொல்ல வேண்டுமானால் நான் எப்போதும் பயத்துடன் இருக்கிறேன். சரியான படத்தை கொடுக்க மாட்டேனா என்ற பயத்திலேயே வாழ்கிறேன். நான் நிறைய முறை தவறாக கூறப்பட்டு தவறாக புரிந்து கொள்ளப்பட்டேன் என கூறி உள்ளார்.