உங்கள் மனதில் இருக்கும் கேள்வி இதுதானா.?

துவரம்பருப்பை வேக வைக்க ரொம்ப நேரம் ஆகுதா ?

துவரம்பருப்போடு அதிக அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்தாலும், குறைவான தண்ணீர் சேர்த்து வேக வைத்தாலும் நல்லா வேகாது. ஆனா, துவரம்பருப்போட கொஞ்சமா நெய் அல்லது விளக்கெண்ணெய் சேர்த்து வேக வைத்தால் சீக்கிரமா நல்லா வெந்துவிடும்.

துவரம்பருப்போட தேங்காய்த் துண்டை நறுக்கிப் போட்டு வேகவைத்தாலும் சீக்கிரமா வெந்துவிடும்.

நீங்க சட்னிக்கு அரைக்கும்போது அதிகளவு தண்ணீர் சேர்த்து அரைச்சுட்டீங்களா? 

சட்னிக்கு அரைக்கும்போது அதிகளவு தண்ணீர் சேர்த்து அரைச்சுட்டா, சுத்தமான மெல்லிய துணி அல்லது பிளாஸ்டிக் வடிகட்டியில் சட்டினியைப் போட்டு, அதிகப்படியான தண்ணீரை வடித்துவிடலாம்.

குருமாவுக்கு மசாலா அரைக்கும்போது கசகசா மட்டும் சரியாக அரைப்படவில்லையா?

குருமாவுக்கோ அல்லது வேறு ஏதாவது சமையலுக்கோ கசகசாவை அரைப்பதாக இருந்தால், சுடுநீரில் பத்து நிமிடங்கள் ஊறவைச்சு கசகசாவை முதலில் அரைத்து, பிறகு மற்ற பொருள்களைச் சேர்த்து அரைக்க வேண்டும்.

உடல்நலத்துக்கு கேடு உண்டாக்கும் சமையல் சோடாவிற்குப் பதிலாக என்ன பயன்படுத்தலாம்?

போண்டா, பக்கோடா போன்றவற்றிற்கு சமையல் சோடாவைப் பயன்படுத்துவோம். சமையல் சோடாவிற்கு பதிலா போண்டா, பக்கோடா செய்யும்போது கொஞ்சம் அரிசிமாவு சேர்த்து செய்யலாம். இது உடல் நலத்திற்கும் நல்லது. ரொம்ப சுவையாகவும் இருக்கும்.

சமைக்கும்போது கீரை நிறம் மாறாமல் இருக்க திறந்து வைத்து சமைத்தால் போதும்.

காய்கறிகளை பிளாஸ்டிக் கவரில் வைத்தால் சத்து குறையாது. சிலசமயம் வெம்பி விடும். எனவே கொஞ்சம் காற்றோட்டமான பிளாஸ்டிக் கவரில் வைக்கலாம்.

மிளகாய் பொடியில் வண்டு வருகிறதா? இதை ட்ரை பண்ணுங்க !

கையில் ஈரத்தோடு மிளகாய் பொடியை எடுத்தால் சீக்கிரமாக மிளகாய்ப்பொடியில் வண்டு வந்துவிடும். எனவே மிளகாய் பொடியை சமையலுக்குப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும்.

ஒரு சிறிய டப்பாவில் தேவையான அளவு மிளகாய்ப்பொடியை எடுத்து வைத்துப் பயன்படுத்துவதன் மூலம் இப்பிரச்சனையைத் தவிர்க்கலாம்.

மிளகாய் பொடியை மிஷினில் அரைத்து வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வந்ததும், அதை ஒரு பேப்பரில் கொட்டி ஆற வைத்து, காற்றுப் புகாத டப்பாக்களில் போட்டு பத்திரமாக வைக்க வேண்டும்.

ரெடிமேட் பொடிகளை வாங்கிப் பயன்படுத்துபவர்கள் அட்டை டப்பாவிலே வைக்காமல், அதை வேறொரு டப்பாவில் மாற்றி வைத்து பயன்படுத்தலாம்.