தமிழ் திரைஉலகில் கவர்ச்சிப் பதுமைகளாக மட்டுமே காட்சிப்படுத்தப்பட்ட இரு நடிகைகள், தாய்மைக்கு இலக்கணமாய், தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டி வருகின்றனர்.
குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டினால் தாயின் அழகு கூடும் என்பதற்கு சாட்சியான தாயுள்ளம் காக்கும் நிஜ நாயகிகள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
எங்களுக்கும் ஒரு குழந்தை என்று ஏங்குவோர் பலர் இருக்கும் நிலையில், குழந்தைச் செல்வம் கையில் கிடைத்த தாய்மார்களில் எத்தனை பேர் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுகின்றனர் ?
தமிழகத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது . அந்த வகையில் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் 54.7 சதவீதம் தாய்மார்கள் மட்டுமே தாய்ப்பால் ஊட்டுவதாக சுட்டிக்காட்டியுள்ள மருத்துவர்கள், 6 மாதங்கள் வரை 48.3 சதவீதம் தாய்மார்களும், 2 வயது வரை 21.4 சதவீதம் தாய்மார்களும் மட்டுமே தங்கள் செல்லச் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் மகத்தானது, சத்துமிக்கது என்பதை சுட்டிக்காட்டும் மருத்துவர்கள், குழந்தை பிறந்தவுடன் தாயின் மார்பில் சுரக்கும் சீம்பாலை குழந்தைக்கு ஊட்டுவது மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தியை குழந்தைக்கு கொடுத்து, தொற்று நோய்களில் இருந்து காக்கும் என்கின்றனர்.
குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதால் தாய்மார்களுக்கு மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கப்படும், குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதால் தாயின் அழகு கெடும் ஆரோக்கியம் குறையும் என்பதெல்லாம் கட்டுக்கதை என கூறும் மருத்துவர்கள், ஆரோக்கியமான உணவுகளை தினமும் எடுத்துக் கொண்டு தாய்மார்கள் குழந்தைக்கு பாலூட்டினால், தாய்க்கு உடல் பருமன் குறைவதோடு, முக அழகும் பொலிவும் கூடும் என்று சுட்டிக்காட்டுகின்றனர் .
அந்தவகையில் தமிழ் சினிமாவில் கவர்ச்சிப் பதுமைகளாக மட்டுமே காட்சிப்படுத்தப்பட்ட வாரணம் ஆயிரம் திரைப்பட நாயகி சமீராரெட்டி, திருமண பந்தத்தின் அடையாளமாக இரண்டாவதாகப் பெற்றெடுத்த பெண் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுகிறார்.
மதராசபட்டினம் நாயகி எமி ஜாக்சன் தனது ஆண்குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிவருவதை புகைப்படமாக எடுத்து மற்ற தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, அதனை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
தாய்ப்பால் பாரம் அல்ல ஒரு அற்புதவரம் என்று உணர்ந்து தங்கள் குழந்தைக்கு தாய்பால் ஊட்டும் இரு நாயகிகளும் சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் நாயகிகள்தான் என்கின்றனர் மருத்துவர்கள்.
பெரும்பாலான தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் தாய்ப்பால் சுரப்பதில்லை என்றும் பணிக்குச் செல்லும் சில பெண்கள் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க இயலாத சூழலில் தள்ளப்பட்டு தவிப்பதாக தெரிவிக்கின்றனர்.
கர்ப்ப காலத்தில் மருத்துவர் அறிவுரைப்படி சத்தான உணவுகளை உட்கொண்டாலே தாய்ப்பால் அதிக அளவில் சுரக்கும் என்றும், குழந்தை பிறந்து சில மணி நேரத்தில் பால் குடிக்க மறுக்கிறது என்று சீனி தண்ணி மற்றும் பவுடர் பாலை ஊட்டி பழக்கினால் பின்னர் அந்த குழந்தை ஒருபோதும் தாய்ப்பால் குடிக்காது என்றும், பிறந்த குழந்தையை எப்பாடுபட்டாவது தாய்ப்பாலுக்கு பழக்குங்கள் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.
தாய்மார்களுக்கு ஆற்றல் அளிப்போம்..! தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்போம்..! நோய் எதிர்ப்பு சக்தி மிக்க சந்ததியை உருவாக்குவோம்..!