நம்மில் எல்லோருக்கும் செடிகளை வளர்க்கப் பிடிக்கும். ‘அதை யார் வாங்கிட்டு வந்து அதை பார்த்துக்குறது’ என்ற அசட்டைத் தனம்தான் அதை வாங்காமல் இருப்பதற்குக் காரணம்.
வீட்டில் கொஞ்சம் செடிகளையாவது வைத்துவிட வேண்டும் என்ற ஆசை பலரிடமும் இருக்கிறது. வீட்டில் மாடித்தோட்டம் அமைக்கும் வாய்ப்புகள் இல்லாதவர்கள், கடைசியாக நாடுவது கட்டடங்களுக்குள் வளரும் தாவரங்களைத்தான். வீடுகள் தொடர்ந்து அலுவலகங்களிலும் அறைக்குள் செடிகள் அதிகமாக வளர்க்கப்பட்டு வருகின்றன. அலுவலகத்தில் செடிகளை வளர்ப்போரிடம் இதைப்பற்றி கேட்டால், மன அழுத்தத்தை முக்கியமான காரணமாகச் சொல்வார்கள். இந்நிலையில் அலுவலகத்தினுள் வளர்க்கும் செடிகளையும், அதைப் பராமரிக்கும் முறைகளையும் விளக்குகிறார், ஹரித் தரங் (harith tharang) இண்டோர் பிளான்ட்ஸ்-ன் உரிமையாளர், ரேஷ்மி சுனில்.
“இப்போது சென்னையில் கட்டடங்களுக்குள் வளர்க்கும் செடிகளை மக்கள் அதிகமாக வளர்க்க ஆரம்பித்துள்ளனர். கடந்த இரண்டு வருடங்களில் இல்லாத விழிப்புஉணர்வு மக்களிடம் அதிகமாகி வருகிறது. அதுவும் கட்டடங்களுக்குள் வளர்க்கும் செடிகளுக்கு சந்தையில் அதிக கிராக்கி இருக்கிறது. ஒரு வீட்டில் வரவேற்பறை தவிர மற்ற இடங்களில் இந்த வகைச் செடிகளை வளர்ப்பதில் தயக்கம் இருக்கிறது. ஆனால், சமையலறை, கணினி மேஜை, குளியலறை எனப் பல இடங்களில் இவற்றை வைக்கலாம். இப்போது, அதிகமானோர் அலுவலகங்களிலும் வைக்க செடிகளை வாங்கிச் செல்கின்றனர். அலங்காரச் செடிகள் முதல் அவசியமான செடிகள் வரைக்கும் எங்கள் கடைகளில் விற்பனையாகிறது. ஒவ்வொரு இடத்துக்கும், ஒரு பருவநிலை உண்டு. சில செடிகள் தொடர்ந்து ஏசியில் இருந்தாலும் ஒன்றும் ஆகாது. சில செடிகள் தொடர்ந்து ஏ.சியில் இருந்தால் பட்டுப்போய்விடும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
முதலில் நாம் என்ன செடிகள் வாங்கப் போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதற்கு என்ன சூழ்நிலை தேவை, எப்படிப் பராமரிப்பது என்ற விபரங்கள் தெரிந்திருக்க வேண்டும். நமக்கு அந்த விபரங்கள் தெரியாமல் இருந்தால் அதை விற்பனை செய்யும் கடைகளிலும் கேட்கலாம். உதாரணமாகக் கட்டடத்துக்குள் வளர்க்கும் செடிகளில் மணிபிளாண்ட் செடியை எளிதாகத் தொட்டியில் வளர்க்கலாம். இதை வளர்ப்பது எளிது. பராமிப்புக்கள்கூட எளிதுதான். தினமும் தண்ணீர் ஊற்றக்கூடாது. முக்கியமாக அதற்குத் தண்ணீரை ஸ்பிரே செய்தாலே போதுமானது. இதுபோக காற்றைத் தூய்மையாக்கும் செடிகளும் அதிகமாக இருக்கின்றன. அவற்றில் ஸ்பைடர் பிளான்ட், பீஸ் லில்லி, எரேகா காம், சைனீஸ் எவர்கீரின், ரேபிஸ் பாம் போன்ற செடிகள் காற்றைச் சுத்தப்படுத்தும் செடிகளில் முக்கியபங்கு வகிப்பவை. இவை மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகளாகவும் இருக்கின்றன.
நாம் இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். நம்மில் எல்லோருக்கும் செடிகளை வளர்க்கப் பிடிக்கும். ‘அதை யார் வாங்கிட்டு வந்து அதை பார்த்துக்குறது’ என்ற அசட்டைத் தனம்தான் செடிகளைத் தவிர்ப்பதற்கு முக்கியக் காரணம். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமானால், ஒரு வாரம் வெளியூர் போகத்தான் மனம் நினைக்கும். அப்போது நமது மனதில் தோன்றும் இடங்கள் பசுமையாகத்தான் இருக்கும். அந்த பசுமையை நம்முடைய அலுவலகங்களில் வைத்து பார்த்துக்கொண்டால் அதிக மன அழுத்தத்திலிருந்து எளிதாக தப்பிக்கலாம். ஒரு மருத்துவமனையில் மீன் தொட்டிகள் இருப்பது எதற்கென்றால், நோயாளிகள் அதைப் பார்க்கும்போது, மனம் அமைதியான நிலைக்கு வரும் என்பதற்காகத்தான். அதுபோலத்தான் இன்றைய கார்ப்பரேட் கம்பெனி யுகத்தில் மனஅழுத்தத்தைக் குறைக்கசெடிகளும். இன்னும் ஓரிரு வருடங்களில் அலுவலகங்களில் வேலை செய்வோர் அனைவரது மேஜைகளிலும் நிச்சயமாகச் செடிகள் இருக்கும்.
நாம் தேர்வு செய்யும் செடிகளானது, அலுவலக அறையின் வண்ணம், தன்மையோடு ஒத்துப்போகும் விதத்தில் இருக்க வேண்டும். செடியின் தொட்டியை அலங்கரிப்பது இன்னும் கூடுதலான அழகைத் தரும். சாதாரண குவளை மாதிரியான தொட்டியில் சக்கலன்ட் (succulent) செடியை வளர்க்கும்போது, செடியின் அடிப்பகுதியில் கூழாங்கற்களை போட்டு வைத்தால் எளிமையானதாகவும், அழகானதாகவும் இருக்கும்.
அலங்காரச் செடிகள் சென்னையில் நர்சரிகளிலும், அதற்காகவே இயங்கும் கடைகளிலும் பலவிதமாகக் கிடைக்கின்றன. உங்கள் அலுவலகத்தின், வைக்கும் இடத்தின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப வளரும் செடி வகைகளைத் தேர்ந்தெடுக்கலாம். அத்துடன், அந்தச் செடிகள் வளர்ப்புக்கு உகந்த மண் ரகம் நம்மிடம் இருக்கிறதா என்பதைச் சரிபார்த்துக்கொள்ளவும். கட்டடங்களுக்குள் வளர்க்கப்படும் செடிகளுக்கு, தினமும் தண்ணீரை ஸ்பிரே செய்ய வேண்டும். அதனால் இலைகளில் இருக்கும் தூசிகள் நீங்கிவிடும். அதன் இலைகளில் உள்ள தூசிகளை நீக்கத் தேவையான அளவுக்குத் தண்ணீரை கொடுத்தால் போதும், அதிகமான தண்ணீர் ஸ்பிரே செய்வது செடி அழுகலை உண்டாக்கிவிடும்.
சூரியஒளி தேவைப்படும் செடிகளை வாரம் ஒருமுறை மிதமான சூரியஒளி படுமாறு அலுவலக வெளியிலோ, மாடியிலோ வைத்து எடுக்கவேண்டும். சூரிய ஒளியில் வைப்பதற்கு முன் செடியின் அடிமண்ணைக் கிளறிவிட வேண்டும். தண்டுச் செடிகளாக இருந்தால், தண்டின் அடிப்பாகத்தில் மட்டுமே தண்ணீர்விட வேண்டும். அதிகமான கிளைகள் வளர்ந்திருப்பின் அதனை வெட்டிவிடலாம். பூச்சிகள் தாக்காமல் இருக்க இயற்கை பூச்சி விரட்டிகளை ஸ்பிரே செய்யலாம். இதற்காக அதிகமான மெனக்கெடல்கள் தேவையில்லை. மனசு வைத்தாலே போதும்” என்றார், ரேஷ்மி சுனில்.