பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துவரும் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றமை, தேர்தல் நடவடிக்கைககளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அமைச்சின் செயலாளர் M.M.P.K. மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம், தேர்தல் சட்டத்திற்கு அமைய உரிய நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பணிப்பகிஷ்கரிப்பை முன்னடுத்துள்ள தரப்பினருடன் அண்மையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்போது, அவர்களின் சம்பள முரண்பாட்டிற்கான தீர்வைப் பெற்றுத்தரும் யோசனையை, இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துவரும் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கைகள் இன்று 30ஆவது நாளாகவும் இடம்பெறுகின்றன.
எவ்வாறாயினும், தமது கோரிக்கை தொடர்பில் இதுவரை எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை எனவும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானத்திற்கு அமைய மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சங்கம் குறிப்பிட்டுள்ளது.