யாழ்ப்பாணத்தில் பிறந்து தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்த முதல் கவர்ச்சி நடிகை யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் தவமணி தேவி. இவர் தான் தமிழ்நாட்டின் முதல் கவர்ச்சி நடிகையாவார்.

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்த தவமணி தேவி கொழும்பில் வளர்ந்தவர்.

இவரின் தந்தை கார்த்திகேசு, ஒரு பிரபலமான வழக்கறிஞர். பெற்றோரின் விருப்பப்படி இவர் சிறு வயதிலேயே சென்னைக்குக் குடி பெயர்ந்தார்.

தவமணி தேவியின் திறமையை அவதானித்த பெற்றோர்கள் இவரை பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் படிப்பதற்காக ஊக்குவித்தார்கள்.


இதனால் இவருக்கு தமிழ்த் திரைப்படங்களில் பாடி நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 1937 இல் தனது 15வது வயதில் திரைப்படத்துறையில் நுழைந்தார். அந்தக் கால கட்டத்திலேயே காற் சட்டையுடன் துணிச்சலாக நடிக்க வந்த பெண்மணியாக தவமணி தேவி திகழ்ந்தார்.

இவரது முதல் படமான சதி அகல்யா, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1937 ஆம் ஆண்டில் வெளிவந்தது. முதல் படத்திலேயே அகலிகை வேடத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். படமும் சிறந்த வரவேற்பைப் பெற்றது. இவர் நடித்து 1941 இல் வெளிவந்த வனமோகினியும் பெரும் வெற்றி பெற்றது.

வித்யாபதி, சகுந்தலை, ஆரவல்லி சூரவல்லி, வேதவதி [சீதா ஜனனம்], நாட்டிய ராணி, கிருஷ்ணகுமார், ராஜகுமாரி, பக்த காளத்தி, ஷியாம் சுந்தர் ஆகிய படங்களில் இவரின் நடிப்பு மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.

இவர் 1940 களிலேயே ஒரு படத்திற்கு ரூ.16 ஆயிரம் சம்பளம் வாங்கியவர். இவரது காலத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதற்கே ஒரு படத்திற்கு சம்பளம் ரூ.4000 தான் தரப்பட்டது.தவமணி தேவி கடந்த 1962ஆம் ஆண்டு ஏற்கனவே திருமணமாகி மனைவியை இழந்த கோடிலிங்க சாஸ்திரி என்பவரைக் காதலித்து மணந்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர்.

திருமணத்தின் பின்னர் திரைப்படத் துறையை விட்டு முற்றாக விலகி ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார் தவமணி தேவி.

இந்நிலையில் இராமேசுவரத்தில் தனது இறுதிக் காலத்தைக் கழித்த அவர் 2001ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் திகதி தனது 76வது வயதில் மரணமடைந்தார்.

1937இல் தனது 15வது வயதில் திரைப்படத்துறையில் நுழைந்த தவமணி தேவியின் படங்கள் இன்றும் பேசப்படுகின்றதென்றால் அவர் எந்தளவு பதிவுகளை தமிழ்த் திரையுலகில் விட்டுச் சென்றிருக்கின்றார் என்பதை உணர முடிகின்றது.