சிவகங்கை சாத்தப்பர் தெருவைச் சேர்ந்த அரவிந்த் (வயது 35) ஏரோநாட்டிக்கல் என்ஜினீயராக இருக்கின்றார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னதாக அதே பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரி (30) என்பவரை தீவிரமாக காதலித்து அவரையே திருமணமும் செய்தார்.
அரவிந்த் கடந்த சில மாதங்களாகவே சரியாக வேலை பார்ப்பதில்லை. அத்துடன் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறுகள் மற்றும் மனக்கசப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவ தினத்தன்று மாலையில் நவராத்திரி விழாவையொட்டி காளீஸ்வரி தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அதன் பின்னர் அவர் இரவில் தங்களுடைய வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அங்கே வீட்டில் இருந்து புகை வாடை வந்துள்ளது. உடனடியாக பதறியடித்து ஓடி உள்ளே பார்க்க வீட்டின் அறையில் அரவிந்தன் உடல் முழுவதும் கருகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத காளீஸ்வரி கத்தி கூப்பாடு போட்டு அக்கம்பக்கத்தினர் அழைத்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். குடும்ப பிரச்சினையில் அரவிந்த் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மர்ம நபர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.