இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்பட 49 பிரபலங்கள் மீது தேச துரோக வழக்கில் திடீர் திருப்பம்!

கூட்டு கொலைகள், கற்பழிப்புகள் அதிகரித்து வருவது குறித்து இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்பட 49 பிரபலஞகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், அவர்கள் மீது பீகார் மாநிலத்தின் முசாபர்நகர் போலீசார் தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது குறித்து பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள்,  கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல இயக்குநர் மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற உள்ளதாக முசாபர்நகர் போலீசார் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், 49 பேர் மீது புகார் அளித்த நபர் தவறான தகவல்கள் அளித்ததை பீகார் காவல்துறை விசாரணையில் அறிய முடிகிறது. இதையடுத்து 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற முடிவு செய்துள்ளோம். மேலும், பிரபலங்கள் மீது புகார் கொடுத்த நபருக்கு  எதிராக வழக்குப்பதிவு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.