வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஏழுவயது சிறுவன் உயிரிழந்துள்ளார்!

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஏழுவயது சிறுவன் மரணமடைந்துள்ளமையால் பெற்றோர், உறவினர்கள் வைத்தியசாலையினை முற்றுகையிட்டமையால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

தோனிக்கல் பகுதியில் வசிக்கும் ஜெயச்சந்திரன் டிலக்சன் என்ற ஏழு வயது சிறுவனுக்கு திடீர் சுகயீனம் காரணமாக இன்று அதிகாலை 3.30 மணிக்கு வைத்தியசாலையில் தாயாரினால் அனுமதிக்கப்பட்டுள்ளான். சிறுவனின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தமையினால் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு நான்கு மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிறுவன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளான். இதனால் வைத்தியசாலையை குழந்தையின் தாயார், உறவினர்கள், கிராமத்தவர்கள் முற்றுகையிட்டமையால் குழப்பமான ஒரு நிலை ஏற்பட்டது.

இது பற்றி ஜெயச்சந்திரன் டிலக்சனின் தாயார் தெரிவிக்கும் போது,
என் மகனின் காலில் சிறு பரு ஒன்று காணப்பட்டது அது எவ்வாறு வந்தது என என் மகனிடம் கேட்டேன். நண்டு குத்தியது என்று சொன்னான். பின் நான் சாப்பாடு அவனுக்கு கொடுத்தேன். அதன் பின்னர் என் பிள்ளை கடும் மிகவும் இயலாமல் காணப்பட்டான். அத்துடன் மலசலமும் கழித்தான். அவனது மலம் கறுப்பாக போனது.

ஒரு கட்டத்தில் என் பிள்ளையின் உடல் எங்கும் நீல நிறமாக மாறியதால் நான் பயந்த காலை 3.30 மணியளவில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தேன். வைத்தியசாலையில் என் மகன் இறந்து விட்டதாக தற்போது சொல்கின்றனர். எனது மகனுக்கு நேற்று ஏழு மணியளில் சுகயீனம் ஏற்பட்டது என்று தெரிவித்தனர் என்றார்.

இது தெடர்பாக வவுனியா வைத்தியசாலையுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, சிறுவன் வரும் போது உடல் பூராகவும் நீல நிறமாக காணப்பட்டு, மிகுந்த ஆபத்தான நிலையிலே அதிகாலை 3.30 மணிக்கு வைத்தியசாலையில் அனுமதித்தனர். வவுனியா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு நான்கு மணி நேரத்தின் பின்னர் ஜெயச்சந்திரன் டிலக்சன் இறந்துள்ளார். இது தெடர்பான மேலதிக தகவல் சிறுவனின் பிரேத பரிசோதனையின் பின்னரே தெரிவிக்க முடியும் என தெரிவித்தனர்.