விராட் கோலியும் அபாரம்!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான  இரண்டாவது டெஸ்ட் போட்டி முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்களை குவித்துள்ளது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான  இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று புனேவில் தொடங்கியது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். கடந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கலக்கிய ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் இந்த போட்டியிலும் களமிறங்கினார்கள்.

ரோகித் சர்மா 14 ரன்கள் மட்டுமே எடுத்து  ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்து வந்த புஜாரா மீண்டும் ஒருமுறை சிறப்பாக விளையாடி 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதேபோல கடந்த போட்டியில் இரட்டை சதமடித்த  மயங்க் அகர்வால் இந்த போட்டியிலும் அசத்தலான சதத்தினை அடித்துள்ளார். அவர் 195 பந்துகளில் 16 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 108 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அதனையடுத்து களமிறங்கிய கோலி, ரஹானே இருவரும் நிதானமாகவும், அதே சமயம் நேர்த்தியாகவும் விளையாடினார்கள். முதல் நாள் ஆட்ட நேரமுடிவில் இந்திய அணி 273 ரன்களை எடுத்துள்ளது. கோலி 63 ரன்களுடனும், ரஹானே 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று விழுந்த 3 விக்கெட்டுகளையும் தென்னாபிரிக்க அணியின் ரபாடவே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன்கூட்டியே 85.1 ஓவர்களில் முடித்து கொள்ளப்பட்டது.