உலக ரகர் வெற்றிக்கிண்ண போட்டியில் முதல் முறையாக சில போட்டிகளை இரத்து செய்யும் நிலை இதன் ஏற்பாட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வார இறுதியில் ஜப்பானில் வீசவுள்ள Hagibis என்ற சூறாவளியே காரணமாகம். இதற்கு அமைவாக சனிக்கிழமை நடைபெறவுள்ள நியூஸ்லாந்து மற்றும் இத்தாலி அணிகளுக்கிடையிலான போட்டியையும் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியையும் இரத்து செய்வதற்கு ரகர் உலகக்கிண்ண போட்டி ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஸ்கொட்லாந்து மற்றும் ஜப்பானுக்கு இடையிலான போட்டி தொடர்பிலும் இன்று மாலை தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Hagibis என்ற சூறாவளியின் காரணமாக இந்த போட்டிகளை இரத்து செய்யும் நிலை ஏற்பட்டதை இட்டு தாம் கவலை தெரிவிப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதுடன், வீரர்கள் பார்வையாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தியே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Hagibis சூறாவளி எதிர்வரும் சனிக்கிழமை அதிகாலை ஜப்பானுக்குள் பிரவேசிக்கும் என்றும் இது மணித்தியாலத்திற்கு 216 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என்றும் அந் நாட்டு வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சூறாவளியின் காரணமாக கடும் மழை பெய்யும் என்றும் கடல் அலைகள் கரையை கடக்கும் என்பதினால் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.