எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும்!

ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோருகின்றது.

புறக்கணிப்பு என்ற முடிவை ஈழத் தமிழ் மக்கள் கைவிட வேண்டுமாயின் கீழ்வரும் கோரிக்கைகளை சர்வதேச சமூகம் ஏற்று அங்கீகரிக்க வேண்டும்.

இத் தேர்தலில் போட்டியிடும் பிரதான சிங்கள பௌத்த பேரினவாதக் கட்சிகள் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாகவும், பொறுப்புக் கூறல் தொடர்பாகவும் ஏற்கனவே தமது உத்தியோக பூர்வமான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளன.

குறிப்பாக ஒற்றையாட்சி தவிர வேறு எதற்கும் இணங்குவதற்குத் தாம் தயார் இல்லை எனவும், ஏற்கனவே உள்ள ஒன்றையாட்சிக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கம் மட்டுமே தமக்கு உண்டு எனவும் வேண்டுமானால் ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களை பரவலாக்க முடியுமென்றும் தெரிவித்துள்ளனர்.

சமஸ்ட்டி என்பதனை அடியோடு நிராகரிப்பதாகவும், அனைத்துத் தரப்புக்களும் கூறியுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக பிரதான கட்சிகளது இரண்டு வேட்பாளர்களும் இது ஓர் சிங்கள பௌத்த நாடு எள்பதனையும் அதன் அடையாளத்திற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையில் தாம் செயற்படுவோம் எனவும்,

இலங்கை படைத்தரப்புக்கள் போர் வீரர்கள் என்றும் அவர்களை பாதுகாப்பது தங்களது தார்மீக கடமை என்றும் அவர்களது கௌரவத்தை தாம் நிலைநாட்டுவோம் என்றும் கூறியுள்ளனர்.

இந்தக் கொள்கைப் பிரகடனங்கள் வெளியாகியுள்ள நிலையில் ஈழத் தமிழ்த் தேசத்தவர்களுக்கு இந்தத் தேர்தலில் எந்த நன்மையும் வரப்பேவதில்லை என்பது உறுதியாகியுள்ளமை மட்டுமல்ல.

இத் தேர்தலில் கலந்து கொண்டு மேற்குறித்த வேட்பாளர் எவருக்காவது வாக்களிப்பதாக இருந்தால் தமிழ்த் தேசம் தங்களது அடைப்படை நிலைப்பாடுகளை கைவிட்டு செல்லத் தயார் என்ற செய்தியையே உலகத்திற்கு வழங்குவதாக அமையும்.

இப்பின்னணியிலே ஈழத் தமிழ்த் தேசத்திற்கு இந்தத் தேர்தலை பகிஸ்கரிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனரே தவிர மாற்று வழிகள் எதுவுமே இல்லை.

தமிழருடைய வாக்குகள் ஒரு தரப்புக்குத் தேவையாக இருந்தால் அத்தரப்பும் அத்தரப்பினை ஆட்சிக்குக் கொண்டுவர விரும்பும் சர்வதேச வல்லரசுகளும் பின்வரும் கோட்பாடுகளை சட்ட ரீதியாக தத்தமது நாடுகளில் அங்கீகரிக்க வேண்டும்.

  • தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தின் அடிப்படையில் இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின தேசம் என்பதனையும் அதன் தனித்துவமான இறைமையையும் அங்கீகரிக்க வேண்டும் என்பதுடன் சுயநிர்ணய உரிமையை முழுமையான அனுபவிக்கக் கூடிய சமஸ்டித் தீர்வை பெற்றுத்தருவதனை உறுதி செய்ய வேண்டும்.
  • பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒற்றையாட்சிக்கான இடைக்கால அறிக்கை நிராகரிக்கப்படல் வேண்டும்.
  • தமிழ்த் தேசத்தின் மீது இடம்பெற்ற மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், இனவழிப்புக்குற்றங்கள் தொடர்பில் முழுமையான சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதி மன்றம் ஊடாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.
  • பயங்கரவாதத் தடைச்சட்டம் உடன் நீக்கப்படல் வேண்டும்.
  • அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுவிக்கப்படல் வேண்டும்.
  • காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உடனடியாக கண்டறியப்பட சர்வதேச விசாரணை வேண்டும்.
  • காணி விடுவிப்பு, இடம்பெயர்ந்த மக்களின்; உடனடியான மீள் குடியயேற்றம், இராணுவவெளியேற்றம் என்பன உடனடியாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.
  • தமிழ்த் தேசத்தில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்.
  • வடக்கு கிழக்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிராந்தியமாக பிரகடனப்படுத்தப்பட்டு இப்பிரதேசத்தை கட்டியெழுப்புவதற்கான நிதியை கையாள்வதற்கு ஓர் பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு அதற்கான நிதி நேரடியாக கிடைப்பதற்கு சர்வதேச சமூகம் உத்தரவாதமளிக்க வேண்டும்.

மேற்படி கோரிக்கைகள் இந்திய மேற்கு நாடுகளால் சட்ட பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே பகிஸ்கரிப்பை கைவிடுவது பற்றி பரிசீலிக்க முடியும்.