இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மணீஷ் பாண்டே தன்னுடைய வாழ்க்கை பயணத்தில் புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதிகம் வாய்ப்பு கிடைக்காத திறமையான வீரர்களின் ஒருவரான மனிஷ் பாண்டே டிசம்பர் 2 ம் தேதி மும்பையில் தென்னிந்திய நடிகையுடன் திருமணம் செய்து கொள்ள உள்ளார். பாண்டே தற்போது கர்நாடகா அணிக்காக, அணியின் கேப்டனாக விஜய் ஹசாரே டிராபி போட்டியில் விளையாடுகிறார்.
30 வயதான மனிஷ் பாண்டேவுக்கு திருமணம், தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை அஷ்ரிதா ஷெட்டியுடன் நடைபெறுகிறது. இருவரும் காதலிப்பதாக மிக நீண்ட காலமாக வலுவான செய்திகள் வந்தன, ஆனால் இப்போது அவர்களது திருமண செய்தி ஊடகங்களில் வெளிவந்த பின்னர் அது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
26 வயதான நடிகை அஷ்ரிதா ஷெட்டி இதற்கு முன்பு இந்திரஜித், ஓரு கன்னியும் மூனு களவாணிகளும், உதயம் என்.எச் 4 போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இப்போது, ஆர்.பன்னீர்செல்வம் இயக்கத்தில் வரவிருக்கும் ஒரு படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
மனிஷ் பாண்டேவின் திருமணம் அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்கலாம் என தெரிகிறது. ஏனெனில் வங்கதேச அணியுடன் போட்டி நவம்பர் 26 ஆம் தேதி முடிந்தவுடன், அடுத்த தொடரான வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் 20 ஓவர் போட்டி மும்பையில் டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் 2 ஆம் தேதி திருமணத்தில் இந்திய வீரர்கள் பங்கேற்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.