நாடு திரும்பிய பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னருக்கு மலேசிய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகின் நாடு திரும்பியுள்ள நிலையில் அவருக்கு மலேசிய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இறுதி போட்டிக்கு 4 பேர் தேர்வான நிலையில் முகின் ராவ் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லொஸ்லியாவும் பிடித்தனர்.

மலேசியாவை சேர்ந்த முகின் பாடல் பாடுவது, கலைநயமிக்க பொருட்கள் செய்வது என ஆரம்பத்தில் உற்சாகமாகக் காணப்பட்டார். போட்டியாளர்கள் தங்களை பற்றி அனைவர் மத்தியிலும் கூறிய போது, முகின் சிறுவயதிலிருந்து தான் தனிமைப்படுத்தப்பட்டதாகக் கூறி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தினார். இதனால் அபிராமியின் அன்பை பெற்ற முகின் அதனால் சில சங்கடங்களுக்கும் ஆளானார்.

இருப்பினும் சக போட்டியாளர்களின் உந்துதலால் மீண்டும் புத்துணர்ச்சி பெற்ற முகின், இறுதி போட்டிக்கு நேரடியாக செல்லும் டிக்கெட் டு பினாலே போட்டியில் கடுமையாக விளையாடி இறுதி போட்டிக்கு முன்னேறினார். டிக்கெட் டு பினாலே மூலம் இறுதி போட்டிக்கு சென்றவர்கள் இறுதி போட்டியில் வெற்றிபெற மாட்டார்கள் என்ற நிலை கடந்த சீசன்களிலும் இருந்தது. இருப்பினும் அதை உடைத்து இம்முறை முகின் பிக் பாஸ் சீசன் 3 இன் டைட்டில் வின்னர் ஆனார்.