புதுச்சேரி அருகே கரையாம்புத்தூரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பெண்கள் பலி; 3 பேர் படுகாயம்

புதுச்சேரி அருகே கரையாம்புத்தூரில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் பலியாகினர். மேலும் 3 பேர் தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுச்சேரி கரையாம்புத்தூர் ஏரிக்கரை ஓரத்தில் குணசுந்தரி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.

இங்கு தீபாவளிப் பண்டிகையையொட்டி பல்வேறு பட்டாசுகள் மற்றும் வெடிகள் தயாரிக்க ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் இன்று பிற்பகலில் திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. பயங்கர சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மூன்று தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்களும் வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஞானாம்பாள், தீபா ஆகிய இருவரும் வெடி விபத்தில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 தொழிலாளிகள் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

புதுச்சேரியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து பட்டாசு குடோன் உரிமை பெறப்பட்டுள்ளதா? வெடி விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.