யாழ்ப்பாண மேல் நீதிமன்றால் 30 வருட சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட மூன்று இராணுவத்தினரை மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுவித்து விடுதலை செய்வதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2010ஆம் ஆண்டு விசுவமடு பகுதியில் பெண் ஒருவரை கூட்டாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், 2015ஆம் ஆண்டு மூன்று இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், தலா 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது.
இந்த தண்டனை மற்றும் தீர்ப்புக்கு எதிராக, குற்றவாளிகள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீது ஐந்து ஆண்டுகளாக நடத்தப்பட்ட விசாரணைகளின் முடிவில், நேற்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான குமுதினி விக்ரமசிங்க மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர், படையினர் மூவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டனர்.
அத்தோடு குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர். சாந்த சுபசிங்க, தனுஷ்க புஸ்பகுமார, பிரியந்த குமார ஆகிய மூன்று இராணுவத்தினரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
புஷ்பகுமார சார்பில் முன்னிலையாகிய சட்டவாளர் ரஞ்சித் பெர்னாண்டோ, இலங்கை படையினர் மீதான குற்றச்சாட்டுக்கள் ஒரு தீவிரவாத குழுவினால், வேண்டுமென்றே தீய நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டன என வாதிட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த 2015 ஒக்டோபர் நடத்தப்பட்ட விசாரணையின் போது இரு பெண்கள் சாட்சியம் வழங்கியிருந்தனர். இதனையடுத்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு வழங்கியிருந்தார்.
நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்புக்குறித்து 2015 301 ஐ.நா.ஆணையம் குசையின் பாராட்டியதுடன் இலங்கை நீதிமன்ற வரலாற்றில் இராணுவத்திற்கு வழங்கப்பட்ட முக்கியமான தீர்ப்பு என்றும் இத் தீர்ப்பு அரிது என்றும் பாராட்டு தெரிவித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.