இந்திய பெண்கள் அணியில் இடம் பிடித்து விளையாடி வருபவர் ஷபாலி வர்மா. 15 வயதிலேயே சர்வதேச போட்டியில் அறிமுகமாகி, மிக குறைந்த வயதில் கிரிக்கெட் விளையாடிய 2-வது நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டி20- போட்டியில் 33 பந்தில் 46 ரன்கள் விளாசி அசத்தினார். பேட்டிங்கில் சச்சின் தெண்டுல்கர் போன்றும், விக்கெட் கீப்பிங்கில் எம்எஸ் டோனி போன்றும் புகழ்பெற விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஷபாலி வர்மா கூறுகையில் ‘‘மிகவும் இளம் வயது வீராங்கனை என்ற சாதனை மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அது பற்றி அதிக அளவில் நினைத்துக் கொண்டு என்னுடைய தூக்கத்தை தொலைத்துக் கொண்டிருக்கவில்லை. இது ஒரு தொடக்கம்தான்.
கிரிக்கெட்டின் அனைத்து வகை போட்டியிலும் விளையாட விரும்புகிறேன். டி20 கிரிக்கெட் போட்டி என்னுடைய பிடித்தமான ஆட்டம். தற்போது என்னுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்த விரும்புகிறேன். சாதனைகள் மீது கவனம் செலுத்தவில்லை. நான் சச்சின் தெண்டுல்கர் போன்று பேட்டிங் செய்யவும், எம்எஸ் டோனி போன்று கீப்பிங் பணியை செய்யவும் விரும்புகிறேன்’’ என்றார்.