சீன அதிபர் ஜி ஜின்பிங் – இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் முறைசாரா சந்திப்பு நிகழ்ச்சி, சென்னையை அடுத்த சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது. நேற்று மாலை 5 மணிக்கு அர்ஜுனன் தபசு பகுதிக்கு வந்த சீன அதிபரை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் இருவரும் உரையாடியபடி அங்குள்ள சுற்றுலாப் பகுதிகளை பார்த்து ரசித்தனர். கலைநிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தனர்.
பின்னர் இரவு 7.30 மணி அளவில் அங்கேயே சீன அதிபர் ஜின்பிங்குக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இன்று காலை பிரதமர் மோடி தங்கி இருக்கும் தாஜ் பிஷர்மேன் கோவ் ஓட்டலில் மீண்டும் இரு தலைவர்களும் சந்தித்து பேசினர். கண்ணாடி அறையில் அமர்ந்து, கடலையும் இயற்கையையும் ரசித்தபடி இரு தலைவர்களும் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையின்போது, இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினர். ஆலோசனைக்குப் பிறகு வெளியே வந்த இருவரும் கடற்கரையை ரசித்தனர்.