யாழ். போதனாவில் நவீன 160 சிலைஸ் சி.ரி ஸ்கானர்

இன்றைய நாள் யாழ் போதனா வைத்தியசாலை வரலாற்றில் முக்கியமான ஓர் நாளாகும்.

இன்று போதனா வைத்தியசாலையாக விளங்கும் இவ் வைத்தியசாலையானது 1850 ஆம் ஆண்டு அன்றைய யாழ். அரசாங்க அதிபர் சேர் பேசிவல் ஒக்லண்ட் டைக் அவர்களால் தாபிக்கப்பட்டது.

யாழ். போதனா வைத்தியசாலையானது வட பகுதியில் வசிக்கும் ஏறத்தாழ 1.2 மில்லியன் மக்களது பிரதான மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரே ஒரு மூன்றாம் நிலை (Tertiary care) வைத்தியசாலையாகும். வட பகுதியிலுள்ள 5 மாவட்டங்களின் வைத்தியசாலைகளில் இருந்தும் விசேட நிபுணத்துவ மருத்துவ ஆலோசனை மற்றும் மருத்துவ சேவையைப் பெற்றுக்கொள்ள நோயாளர்கள் இங்கு அனுப்பப்படுகின்றனர்.

தினமும் 4000 இற்கும் அதிகமானவர்களுக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்படுகிறது. 2000 இற்கும் அதிகமானவர்கள் பல்வேறு கிளினிக்குகளிலும் 1000 இற்கும் அதிகமானவர்கள் வெளிநோயாளர் பிரிவிலும் 1000 இற்கும் அதிகமானவர்கள் உள்ளக விடுதிகளிலும் சிகிச்சை பெறுகின்றனர். 24 மணி நேரமும் இயங்கும் இவ் வைத்தியசாலையில் 1800 இற்கும் அதிகமான அரச உத்தியோகத்தர்கள் பணிபுரிகின்றனர். 200 இற்கும் மேற்பட்ட தனியார் துறை உத்தியோகத்தர்களும் பணிபுரிகின்றனர்.

யாழ். போதனா வைத்தியசாலையானது கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு படிநிலைகளில் வளர்ச்சி கண்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட இலகு கடன் மூலம் ஆறு தளங்களைக் கொண்ட விபத்து அவசர சிகிச்சைப் பிரிவின் முதல் 2 தளங்களும் இந்த ஆண்டு பெப்பிரவரி மாதம் 14 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. இதன் பெறுமதி ரூபா 590 மில்லியன் ஆகும். சுமார் 1300 மில்லியன் பெறுமதியுடைய ஏனைய 4 தளங்களுக்குரிய வேலைகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.

குவைத் நாட்டினது செம்பிறைச் சங்கத்தின் நன்கொடையில் ரூபா 530 மில்லியன் பெறுமதியடைய (Rehabilitation Centre) மீள்வாழ்வு சிகிச்சை நிலையம் 25.07.2019 அன்று யாழ். போதனாவில் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கையில் வைத்தியசாலை ஒன்றில் அரச மருந்துக் கூட்டுத்தாபனம் – ஒசுசல முதன்முதல் யாழ் போதனா வைத்தியசாலையிலே இந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

சுகாதார அமைச்சின் நிதியில் கடந்த ஆண்டு 100 மேற்பட்பட தாதியர்கள் தங்கக் கூடிய தாதியர்களுக்கான உள்ளக விடுதி திறந்து வைக்கப்பட்டது.

யாழ். போதனா வைத்தியசாலையானது பல்வேறு வளப் பற்றாக்குறைகளுடனும் ஆளணிப் பற்றாக்குறையுடனும் இயங்கிவருகின்றது. யாழ் போதனா வைத்தியசாலையில் தாதியர்களின் பற்றாக்குறை நீண்டகாலமாகவே காணப்படுகின்றது. ஏனைய போதனா வைத்தியசாலைகளோடு ஒப்பிடுகையில் தேவையான ஆளணியினரிலும் குறைந்த எண்ணிக்கையான தாதி உத்தியோகத்தர்கள் மிகுந்த வேலைப்பழுவுக்கு மத்தியில் இங்கு கடைமையாற்றி வருகின்றனர்.

நீண்டகாலமாக 405 ஆகக் காணப்பட்ட தாதியர்களின் ஆளணி 2016 இல் 200 ஆல் அதிகரிக்கப்பட்டது. கடந்த 3 வருடங்களில் புதிதாக விசேட சிகிச்சைப் பிரிவுகள் பல ஆரம்பிக்கப்பட்டன. இதனால் தாதியர்களின் அனுமதிக்கப்பட்ட ஆளணியை மேலும் அதிகரிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. தற்போது 570 தாதிய உத்தியோகத்தர்கள் இங்கு கடமையாற்றுகின்றனர். எமக்கு மேலும் 400 தாதியர்கள் தேவையாக உள்ளது.

வைத்தியசாலையில் இன்னும் பல அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக தனியான ஒரு மகப்பேற்று விடுதி இல்லாதது மிகவும் கவலைக்குரியதாகும். பழைய மகப்பேற்று விடுதி கட்டடம் அபாயநிலையில் காணப்பட்டதால் அது அகற்றப்பட்டு மகப்பேற்று விடுதிக்குரிய நிலம் பல வருடங்களாக வெறுமையாக உள்ளது.

இன்றைய தினம் (12.10.2019) தாராளமனம் படைத்த நன்கொடையாளர்களின் நிதிப்பங்களிப்பில் யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கிடைத்த நவீன 160 Slice CT scanner தொகுதியானது உத்தியோகபூர்வமாக போதனா வைத்தியசாலையிடம் கையளிக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்படுகிறது.

நாம் இன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் 160 Slice CT scanner தொகுதி அமைந்துள்ள இக்கட்டடமானது யப்பான் நாட்டு மக்களால் மருத்துவ உபகரணங்களுடன் நன்கொடையாக வழங்கப்பட்டது. நவீன சத்திர சிகிச்சைக் கூடம், ஆய்வு கூடம், அதிதீவிர சிகிச்சைப் பிரிவு , எக்ஸ் கதிரியக்க பரிசோதனை முதலான பல வசதிகளுடன் (Imaging facilities) 2012 ஆம் ஆண்டு முதல் இக்கட்டடத்தில் செயற்பாடுகள் நடைபெறுகிறது.

யப்பான் நாட்டு மக்களது ரூபா 2900 மில்லியன் நன்கொடையில் கிடைத்த இத்திட்டம் வடபகுதி மக்களுக்கு ஒரு வரப் பிரசாதமே. இலங்கையில் உள்ள மிகச் சிறந்த ஆய்வு கூடங்களில் (Laboratory) ஒன்று இக்கட்டடத் தொகுதியில் 24 மணிநேரமும் இயங்குகின்றது.

கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் திரு. பொன்னுத்துரை ரஞ்சன் (ஐக்கிய இராச்சியம்) அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த போது யாழ். போதனா வைத்தியசாலைக்கு சி.ரி. ஸ்கானரின் அவசர தேவைப்பாடு குறித்து கேட்டு அறிந்து கொண்டார்.

தற்போது வைத்தியசாலையில் பாவனையில் இருக்கின்ற சி.ரி. ஸ்கானர் 9 வருடங்கள் பழைமை வாய்ந்தது. அத்துடன் அடிக்கடி பழுதடைந்து அதன் செயற்பாடு தடைப்படுகின்றமையால் நோயாளிகள் பல அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படுகின்றது. நோயாளிகளை சத்திரசிகிச்சை மேற்கொள்ள முன் சி.ரி. ஸ்கான் எடுப்பதுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கும், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கும் அனுப்பி சி.ரி. ஸ்கான் செய்ய வேண்டிய நிலை காணப்பட்டது. இதனால் உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கி நோயாளர்களின் உயிரைக் காப்பாற்றுவதில் நெருக்கடி நிலை காணப்பட்டது.

யாழ். போதனா வைத்தியசாலையைப் பொறுத்தவரை 2 சி.ரி. ஸ்கானர்கள் இருப்பது மிகவும் அவசியமானதாகும். ஆகவே இன்னொன்றை அரச நிதியினூடாகப் பெற்றுக் கொள்ளும் முயற்சிகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம்.

இவ்வருட இறுதியில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எம்.ஆர். ஐ ஸ்கானர் கிடைக்க உள்ளது. பராமரிப்புச் செலவுடன் இதன் பெறுமதி ரூபா 375 மில்லியன் ஆகும். எம்.ஆர். ஐ ஸ்கானர் அரச நிதியிலேயே முழுமையாக எமக்குக் கிடைக்க உள்ளது.

ஆகவே நன்கொடையாளர்களின் உதவியில் சி.ரி. ஸ்கானர் ஒன்றை விரைவாகப் பொருத்தும் முயற்சியில் ஈடுபட்டோம். திரு. ரஞ்சன் அவர்கள் 46 மில்லியன் ரூபா நிதியுதவியை நன்கொடையாக வழங்கி இந்தக் கைங்கரியத்தை ஆரம்பித்து வைத்தார். அவருக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் யாழ். போதனா வைத்தியசாலை சார்பிலும் வட பகுதி மக்களின் சார்பிலும் முதற்கண் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். திரு. ரஞ்சன் அவர்கள் பல்வேறு அமைப்புக்களை, ஐக்கிய இராச்சியம், கனடா, அவுஸ்திரேலியா சுவிற்சர்லாந்து, இலங்கை முதலான நாடுகளில் உள்ள நன்கொடையாளர்களை இணைப்பதிலும் பிரதான பங்கை வகித்துள்ளார்.

அதேவேளை இவ்விடயம் தொடர்பில் பல மாதங்களுக்கு முன்னர் சுவிற்சர்லாந்தில் வசிக்கும் எஸ்.கதிர்காமநாதன் (எஸ்.கே.நாதன்) அவர்களைத் தொடர்பு கொண்டபோது அவர் வைத்தியசாலைக்கு வருகை தந்து சி.ரி. ஸ்கானர் ஐக் கொள்வனவு செய்வதுக்காக ரூபா 20 மில்லியனை வழங்கி இருந்தார். திரு. நாதன் அவர்களுக்கும் வைத்தியசாலை சமூகத்தினது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

இலண்டனில் வசிக்கும் பாலசிங்கம் நந்தபாலன் அவர்கள் 13 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை வழங்கி சி.ரி ஸ்கானரை விரைவாகக் கொள்வனவு செய்ய உதவி புரிந்தமைக்காக அவருக்கும் வைத்தியசாலை சமூகத்தினது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

இவர்களை விட இன்னும் பலர் பெருமளவு நிதி வழங்கி இந்தக் கைங்கரியத்துக்கு உதவியிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் நன்றிக்கும் பராட்டுக்குரியவர்கள். ஐக்கிய இராச்சியத்தில் இயங்கிவரும் அபயம் தொண்டு நிறுவனமும் சி.ரி. ஸ்கானர் கொள்வனவு செய்வதுக்கு நிதிப்பங்களிப்பைச் செய்ததுடன் ஆரம்பம் முதலே திரு. ரஞ்சன் அவர்களுடன் இணைந்து ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஏனைய தொண்டு நிறுவனங்களை இணைப்பதிலும் நன்கொடையாளர்களை ஊக்குவித்து அனுசரணை வழங்குதிலும் அர்ப்பணிப்போடு செயற்பட்டது. நன்கொடையாளர்களிடம் இருந்து கிடைத்த நிதியானது யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தின் (Jaffna General Hospital Development Association) வங்கிக் கணக்கில் வரவுவைக்கப்பட்டது.

இந்த நற்காரியத்துக்குப் பங்களித்த தனிநபர்கள், அமைப்புக்களின் பூரண விவரங்கள் நினைவுக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நவீன சி.ரி. ஸ்கானர் இயந்திரம்(கணினி வழி உடலுறுப்பு ஊடுகதிர்ப்படக் கருவி) 112.5 மில்லியன் ரூபா பெறுமதியானதாகும்.

இந்த வேளையில் நவீன 160 Slice CT scanner சி.ரி. ஸ்கானர் இயந்திரம் வைத்தியசாலைக்குக் கிடைப்பதுக்குக் காரணமான திரு. பி. ரஞ்சன் (ஐக்கிய இராச்சியம்), திரு. எஸ்.கதிர்காமநாதன், திரு. பாலசிங்கம் நந்தபாலன் ஆகியோருக்கும் ஏனைய நன்கொடையாளர்களுக்கும், மற்றும் அமைப்புக்களுக்கும் வைத்தியசாலையின் சார்பிலும் வட பகுதி மக்களின் சார்பிலும் மீண்டும் நன்றியைத் தெரிவிப்பதோடு ஐக்கியராச்சியத்தில் இயங்கும் அபயம் நிறுவனத்துக்கும், யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது வைத்தியசாலையின் சேவையை மேலும் விரிவுபடுத்த எதிர்காலத்திலும் புலத்திலும் தாயகத்திலும் வசிக்கும் புரவலர்களின் உதவி வைத்தியசாலைக்கு கிடைக்கும் என்று நம்பிக்கையுள்ளது.

வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி
பணிப்பாளர்,
போதனா வைத்தியசாலை,
யாழ்ப்பாணம்.