கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் வடக்கு மாகாண ஆளுனரின் ஆதரவோடு அரசகாணியை அவுஸ்ரேலிய பிரஜை ஒருவருக்கு மிக சூட்சுமமான முறையில் வழங்க முற்பட்டமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள சோழர்காலத்து பழைமைவாய்ந்த இடமான கௌதாரி முனை பகுதியில் நூறு ஏக்கர் பரப்பளவை கொண்ட அரசகாணியை வடமாகண ஆளுனர் அவர்கள் வாசுதேவன் என்ற அவுஸ்ரேலிய பிரஜைக்கு வழங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்;.
இதனால் அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மக்கள் தங்களது தொழிலை இழக்க நேரிடுவதோடு வாசுதேவனால் அமைக்கப்படும் உல்லாச விடுதிகளுக்காக மணல்மேடுகள் அகற்றப்படுதவால் அப்பகுதியில் உள்ள நன்னீர் கிணறுகள் உப்பு நீராக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை அப்பிரதேச மக்களுடன் கடந்த வாரம் ஆளுனர் தரப்பு கலந்துரையாடல் ஒன்றை நிகழ்த்தியிருந்தது. இக்கலந்துரையாடலின் பொழுது இராணுவம் மற்றும் பொலிசார் பெருமளவில் குவிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சம் காரணமாக தங்களது எதிர்ப்பை தெரிவிக்கவில்லை.
இவ்விடயம் தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில், நூறு ஏக்கர் காணியை பிரதேச செயலாளர் தனியொருவருக்கு வழங்குவதால் தங்களது வருங்கால சந்ததிக்கு காணி அற்றுபோகும் என்பதுடன், பூநகரி பகுதியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள் விவசாய மற்றும் தொழில் முயற்சிகளுக்கு காணி அற்ற நிலையில் உள்ளார்கள் எனவும் சாதாரண பொதுமக்கள் இரண்டுகாணிகள் வைத்திருந்தால் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் பிரதேச செயலாளர் எவ்வாறு தனியொருவருக்கு நூறு ஏக்கர் காணி வழங்கமுடியும் என அப்பிரதேச மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் காலங்களில் அரச காணிகளை பகிர்ந்து அளிக்க முடியாது என 2048/2 அரச வர்தjமானியின் பந்தி நான்கில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தும் ஆளுனரினதும் பாராளுமன்ற உறுப்பினரினரதும் தொடர் அழுத்தம் காரணமாக குறித்த காணிகள் வழங்குவதற்கு பிரதேச செயலகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.