தமிழகம் இந்தியாவின் அதிகக் கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் ஒன்று. ஆனால், பாடப்புத்தகங்கள் அல்லாத நூல்களின் வாசிப்பில் கல்வியறிவு பெற்ற பிற மாநிலங்களைவிடப் பின்தங்கி நிற்கிறது. கடந்த 150 ஆண்டுகளில் தமிழகத்தில் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சி பெற்றுள்ளார்கள். கல்வியிலும் பொருளாதாரத்திலும் தமிழ் மக்கள் வளர்ச்சி பெற்றுள்ளார்கள்.
இத்தகைய காலகட்டத்தில் ஒரு சமூகத்தின் கவனம் கல்வியிலும் பொருள் ஈட்டும் படிப்பிலும் இருப்பது இயல்புதான். ஆனால், ஒரு சமூகத்தின் பரிணாம வளர்ச்சி பொருளாதார முன்னேற்றத்துடன் நின்றுவிடுவதில்லை. நல்ல உணவு, கல்வி, மருத்துவம், குடியிருப்பு, உடை ஆகியவற்றுக்கு வகைசெய்யும் பொருள்வசதி மிக முக்கியமானது. அதேநேரம், மனிதரின் அகம் மேன்மையடைய இலக்கியம், சிந்தனைகள், ஆன்மிகம் வழி கிடைக்கும் விவேகம் மிக முக்கியமானது. எத்துறையில் இயங்குவோரும் பரந்துபட்ட வாசிப்பு இருந்தால், தத்தமது துறைகளில் மேன்மையடைய முடியும்.
இதில் மதம் நோக்கி ஏற்பட்டிருக்கும் பெரும் ஈர்ப்பில் ஒரு சிறுபகுதிகூட வாசிப்பு நோக்கி நகரவில்லை. பண்பாட்டுத்தளத்தில் பெரும் பகுதியைத் திரைப்படங்கள் கையகப்படுத்தியிருப்பது ஆரோக்கியமானதன்று. ஊடகங்கள் திரைப்படத் துறைக்குத் தரும் கவனத்தில் நூற்றிலொரு பங்குதான் புத்தகப் பண்பாட்டுக்குத் தருகின்றன. பண்பாட்டில் பெரும் கவனம் கொண்டிருக்கக்கூடிய வளர்ச்சியடைந்த பிரெஞ்சுச் சூழலின் புள்ளிவிவரங்களைப் பார்க்கையில், மொத்த பண்பாட்டுப் பொருளாதாரத்தில் புத்தகத் தொழிலின் பங்கு திரைப்படங்களின் பங்கைவிட மிக அதிகமாக இருந்தது. தமிழகத்தின் மொத்த புத்தகப் பொருளாதாரம் ஒரு நட்சத்திர நடிகர் ஒரு திரைப்படத்துக்குப் பெறும் ஊதியத்துக்கு நிகராகுமா என்பது சந்தேகம். திரை, புத்தகம், நுண்கலை மூன்றுக்கும் உரிய கவனமளிக்கும் பண்பாடே மேன்மையடைய முடியும்.
நமது பொது அரங்குகளில் கருத்துக்கூறும் சான்றோர் உடனே இளைய தலைமுறை படிப்பதில்லை எனக் குறைகூறி அமைதி காண்பார்கள். இது தவறான, ஆதாரமற்ற பார்வை என்பது ஒருபுறம் இருக்க, இன்றைய தலைமுறைக்குப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு மூத்தோருக்கு உண்டு. அப்பொறுப்பு எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
பாடப்புத்தகம் அல்லாத எந்த நூலையும் ஒரு இளையர் வாசிக்கையில், பொருள் ஈட்டும் கல்விக்குச் செலவிட வேண்டிய கவனம் சிதறுவதாகக் கண்டிக்கும் பெற்றோரே அதிகம். தனது இணை இலக்கியப் படைப்புகளை வாசித்தால், எங்கே சிந்திக்கத் தொடங்கி வாழ்க்கையை ‘மேம்படுத்தும்’ ஒத்தையடிப் பாதையிலிருந்து விலகிp பயணித்துவிடுவார்களோ என்று பதற்றமடையும் கணவர்களும் மனைவியர்களும் அதிகம். இதுபோல, கல்வி நிறுவனங்களில் பாடப்புத்தகங்களைத் தாண்டிய வாசிப்பை வரவேற்கும் மனப்பாங்கு ஆகக் குறைவு. மனப்பாடம் செய்தல், மதிப்பெண் பெறுதல் ஆகியவற்றிலேயே இளையரின் கவனம் குவியவைக்கப்படுகிறது. இதுவே தமிழ்ச் சமூகத்தின் பொது மனநிலை. இதிலிருந்து வளரும் இளையர் இவ்வளவு வாசிப்பதே அதிசயம்.
பாடப்புத்தகங்கள் அதிகமும் நேற்றைய உலகைப் பிரதிபலிப்பவை. இன்று காலமாற்றமும் தலைமுறை மாற்றமும் மிக வேகமாக ஏற்படுகிறது. அதேவேகத்தில் பாடப்புத்தகங்களை மேம்படுத்த ஆசிரியர் பெருமக்கள் விரும்புவது இல்லை. ஒரு பாடப்புத்தகத்தில் எவை இடம் பெறலாம் என்பது பற்றிய பார்வை பண்பாட்டுக் காவலர்களாலும் அரசியல்வாதிகளாலும் வரையறுக்கப்பட்டதாகும்.
எனவே, சமூகத்தில் ஏற்படும் பண்பாட்டு மாற்றங் களையும் மாறிவரும் மனோபாவங்களையும் பாடப்புத்தகங்கள் காட்டுவதில்லை. பாடப் புத்தகங்கள் மாறுகையில் ஆசிரியர்களும் தம்மை மேம்படுத்திக்கொண்டால்தான் மாணவர் பயன்பெற முடியும். இது இயல்பாக நடந்து விடுவது இல்லை. ஆகவே, பாடப்புத்தகக் கல்வியிலிருந்து உருவாகும் சமகாலம் பற்றிய விழிப்புணர்வு போதாமைகளுடன்தான் இருக்க முடியும். சமகாலத்துடன் உயிரோட்டமான உறவை ஏற்படுத்திக்கொள்ள சீரிய இதழ்களையும் இலக்கியத்தையும் ஆய்வுகளையும் படிப்பது இன்றியமையாதது.
‘கதைகளைப் படிப்பது நேரத்தை வீணடிப்பதாகும்’ என்ற கருத்து தமிழ்ச் சமூகத்தில் ஆழ வேரூன்றியுள்ளது. நமது கல்வி அமைப்பு இக்கருத்துக்கு வலுசேர்க்கிறது. ஆசிரியர் பெருமக்கள் இக்கருத்தை உறுதிசெய்கிறார்கள் (விதிவிலக்குகள் முக்கியமானவை எனினும், அவற்றை இங்கே கருதவில்லை). அப்படியே இளையர் கதைகளைப் படித்தாலும் அவை ஒழுக்கம் பற்றிய அறிவுரைகள் வழங்குபவையாக இருக்க வேண்டும் என்ற கருத்து பசுமரத்து ஆணிபோலப் பதிந்துள்ளது. கதைகள், ஒரு சமூகம் தனது அனுபவத்தையும் விவேகத்தையும் சேமித்துவைக்கும் பெட்டகங்களாகும். நல்ல இலக்கியம் நமக்கு வாழ்க்கையை விமர்சனப் பார்வையுடன் அணுகி அறிந்துகொள்ளவும் உணர்ந்துகொள்ளவும் வகைசெய்கிறது. அவை ஒழுக்கத்தைப் போதிப்பதில்லை; ஆனால், அறத்தை உணரச்செய்கின்றன. போதனை எப்போதுமே இளையர்களிடம் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.
அதேபோல சீரிய அச்சு, இணைய இதழ்களை வாசித்தலும் முக்கியம். வெகுமக்களுக்குரிய அச்சு, இணைய, காட்சி ஊடகங்கள் அதிகமும் பெரும் பான்மையினரின் கருத்துகளைப் பிரதிபலிக்கையில் சீரிய இதழ்கள் ஊடகங்களின் கவனத்தில் விடுபட்ட மாற்றுச் செய்திகளையும் பார்வைகளையும் முன்வைக்கின்றன. உதாரணத்துக்கு, பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆறுகளை இணைக்கும் திட்டத்தை ஊடகங்கள் பிரச்சாரம் செய்கையில் இந்தியாவின் பல மொழிகளில் அத்திட்டம் பற்றிய விமர்சனங்களும் மாற்றுப் பார்வையும் சீரிய ஊடகங்களில்தான் வெளிவந்தன.
இன்று அந்தப் பார்வை வெகுமக்கள் ஊடகங்களிலும் கவனம் பெறுகின்றது. அதேபோல ஊடகச் செய்திகளை அப்படியே ‘உண்மை’ என்று நம்புவது பொதுமக்கள் மனநிலை. ஆனால், ஊடகங்கள் எதைத் தவிர்க்கின்றன, எதைக் கவனப்படுத்துகின்றன என்பதை உணர்ந்து விமர்சன நோக்குடன் அணுக சீரிய இதழ் வாசிப்பு இன்றியமையாததாகிறது.
பாடப்புத்தகக் கல்வி வேலைவாய்ப்பை வழங்கும். வாழ்க்கையைக் கற்க நல்ல இலக்கியத்தையும் இதழ்களையும் வாசித்தல் அவசியம். உடனடியாக வாழ்க்கையின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவாத, ஆனால், வாசகரின் முழுமையான வளர்ச்சிக்கு வகைசெய்யும் நூல்களின் விற்பனையிலும் தமிழகம் முன்னிற்க வேண்டும்.
முன்னோரின் பண்பாட்டுச் செழுமையை உணர்ந்து பெருமிதம் கொள்வது சிறப்புதான். அதேவேளையில், பெருமிதத்துக்குரிய சமகாலத்தை உருவாக்குவது அதைவிடச் சிறப்பானது. பரந்துபட்ட வாசிப்பின்றி இது சாத்தியமே இல்லை.