இந்தியா இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டியானது மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியின் வீரர்கள் விராட் கோலி ( 254 நாட் அவுட் ) மயங்க் அகர்வால் 108 , ரவீந்திர ஜடேஜா 91 மற்றும் அஜின்க்யா ரஹானே 59 , புஜாரா 58  ஆகியோர் அசத்தலாக விளையாட இந்திய அணி 5 விக்கெட்டுகளை எடுத்து 601 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியால், இந்திய பந்துவீச்சாளர்களின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து முதல் இன்னிங்சில் 275 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனையடுத்து 326 ரன்கள் முன்னிலை பெற்று இருந்த இந்திய அணி மீண்டும் தென்னாபிரிக்க அணிக்கு பாலோ ஆன்  கொடுத்து பேட்டிங் செய்ய வைத்தது.

இதன்படி இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி இன்று தொடர்ந்து பேட்டிங் செய்தது. இந்நிலையில் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து இரண்டாவது இன்னிங்சில் 189 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய தரப்பில் உமேஷ் யாதவ், ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்களையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் இஷாந்த், ஷமி தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள். 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று இந்த தொடரினை வென்று அசத்தியுள்ளது.