உலகக்கிண்ணத்தை தவறவிட்ட நியூசிலாந்து.. சர்ச்சைக்குரிய விதியை நீக்கிய ஐசிசி…!

பவுண்டரிகள் மூலமாக வெற்றியை தீர்மானிக்கும் விதிமுறையை ஐ.சி.சி நீக்கியுள்ள நிலையில், நீயூசிலாந்து வீரர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் போட்டிகள் சமனில் முடிந்தால், சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதுவும் சமனில் முடிந்தால் பவுண்டரிகள் அடிப்படையில் வெற்றி பெற்ற அணி தீர்மானிக்கப்படும். இந்த விதிமுறையானது கடந்த உலகக் கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்திய அந்த போட்டி சமனில் முடிந்தது.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சூப்பர் ஓவரும் சமனானது. இதனால் அதிக பவுண்டரிகள்(22) அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து வெற்றிக்கு தகுதியான அணி என்றாலும், நியூசிலாந்து சமபலத்துடன் விளையாடியது.இதனால் ஐ.சி.சி-யின் இந்த விதிமுறை கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் நடந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில், பவுண்டரிகள் அடிப்படையிலான விதிமுறைகள் நீக்கப்படுவதாகவும், ஆட்டம் சமனில் முடிந்தால் சூப்பர் ஓவர் முறையைக் கொண்டு மட்டுமே முடிவுகள் அறியப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், லீக் போட்டிகளில் சூப்பர் ஓவர்கள் சமனில் முடிந்தால் போட்டி சமனில் முடிந்ததாகவே எடுத்துக்கொள்ளப்படும் என்றும், முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதாவது எந்த அணி அதிகமான ஓட்டங்களை எடுத்து வெற்றி பெறுகிறதோ, அதுவரை சூப்பர் ஓவர் முறைதான் பயன்படுத்தப்படும்.இந்நிலையில், நியூசிலாந்து அணி வீரர் நீஷம் தனது ட்விட்டர் பதிவில், ‘உங்கள் அடுத்த திட்டம் என்ன சிறந்த பைனாகுலர் வாங்கி டைட்டானிக் கப்பலில் ஐஸ் இருப்பதை கண்டுபிடிப்பதுதானே’ என தெரிவித்துள்ளார். இதேபோல் முன்னாள் வீரர் கிரேக் மெக்மில்லன், ‘மிகவும் தாமதமான முடிவு’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.ஐ.சி.சியின் இந்த புதிய விதிகள் குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் தலைமை நிர்வாகி டேவிட் ஒயிட் கூறுகையில், எதிர்காலத்தில் உலகக்கிண்ண போட்டிகள் சமனில் முடியும்போது களத்தில் முடிவெடுக்கலாம். கடந்த காலத்தை நம்மால் மாற்ற முடியாது. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இந்த விவகாரத்தில் ஐ.சி.சி ஒரு நல்ல தீர்வை கொண்டு வந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்’ என தெரிவித்துள்ளார்.