அமெரிக்காவின் மெக்சிகோவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் இராணுவ வீரர் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
மெக்சிகோவில் கடந்த திங்கட்கிழமை பொலிஸ் வாகனங்களை குறிவைத்து மர்ம கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பொலிஸார் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில் மற்றுமொரு தாக்குதல் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.
மெக்சிகோவின் கியூரெரோ மாகாணத்தில் ஐகுலா பகுதியில் ஆயுதம் ஏந்திய குழு ஒன்று வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் அவர்களை குறிவைத்த மர்ம நபர்கள் சிலர் அந்த வாகனத்தின் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த கோரத் தாக்குதலில் இராணுவ வீரர் உட்பட ஆயுதம் ஏந்திய குழுவினர் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலை நடத்தியவர்கள் உடனடியாக அந்த பகுதியை விட்டு தப்பிச்சென்று விட்டதாகவும் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மெக்சிகோவில் போதைபொருள் கடத்தல் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. போதைப் பொருள் கடத்தல்களில் பல்வேறு குழுக்கள் ஈடுபடுவதால் அவ்வப்போது அந்த குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.