முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குருஹகந்த ரஜமகா விகாரையில் நீதிமன்ற உத்தரவையும் மீறி பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களை பொலிசார் அகற்றியுள்ளனர்.
ஆலயத்தை பௌத்த விகாராதிபதி தரப்பினர் உரிமை கோருவதையடுத்து, இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவாக, ஆலய வளாகத்தில் எந்த தரப்பினரும் புதிய கட்டுமானங்கள் மற்றும் இதர அமைப்புக்களை நிறுவதை நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.
இந்த நிலையில் ஆலய விகாராதிபதி உயிருடன் இருந்த சமயத்தில் சிசிரிவி கமரா அமைப்பை நிறுவியிருந்தார். இதையடுத்து, பிள்ளையார் ஆலய நிர்வாகம் நகர்த்தல் பத்திரம் சமர்ப்பித்து, நீதிவானின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டு வந்தனர்.
இதையடுத்து, சிசிரிவி கமராவை அகற்றும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், விகாராதிபதி உயிரிழந்ததை தொடர்ந்து மீளவும் அங்கு சிசிரிவி கமரா பொருத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, பொலிசாரே இந்த விடயத்தில் தலையிட்டு, சிசிரிவி கமராக்களை அகற்றியுள்ளனர்.