கருணா – மஹிந்த இணைவால் புதிய சிக்கல்

நூற்றுக்கணக்கான பிக்குமார்களை கொலைசெய்த கருணா அம்மானின் ஆதரவை மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெற்றுக்கொள்ள முடியுமென்றால், ஜனநாயக முறையில் அரசியல் செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

இரத்தினபுரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனநாயக முறையில் செயற்படும் அரசியல் கட்சியாகும். ஜனாதிபதி தேர்தலில் அவர்களின் ஆதரவு யாருக்கு என்பதை அந்த கட்சியின் தலைவர் ஆர். சம்பந்தன் அறிவிக்காதவரை எங்களுக்கு எதுவும் தெரிவிக்கமுடியாது.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளித்தால் அதனை வரவேற்று ஏற்றுக்கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை.

அத்துடன் பலாலி விமான நிலைய பெயர்ப்பலகையில் தமிழ் மொழிக்கு கீழ் சிங்கள மொழி பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதனை பாரிய பிரச்சினைபோல் காட்ட சிலர்முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.