சென்னையில் இயங்கி வரும் டாஸ்மாக் பார்களில் இரவு நேரங்களில் மதுவிற்பனை நடைபெறுவதாக சென்னை மாநகர காவல் ஆணையருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பூந்தமல்லி, திருவேற்காடு, ஆவடி, குன்றத்தூர், போரூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 27 டாஸ்மாக் பார்களில் சென்னை மாநகர துணை ஆணையர் ஈஸ்வரன் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் முடிவில் முறைகேடாக நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மது பாட்டில்களும், 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தொடர்பாக பார் ஊழியர்கள் உள்பட 41 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அண்ணாநகர், புளியந்தோப்பு உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவு மட்டும் அல்லாமல் அதிகாலையிலும் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்யப்படுவதாக புகார் தெரிவித்துள்ள அப்பகுதியில் வசித்து வரும் பொது மக்கள் காவல் துறையிடம் புகார் அளித்தனர். இந்த புகார் தொடர்பாக போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.