35 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த தேர்தலில் முஸ்லீம்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடிய ஒருவராக இருப்பவர் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மட்டுமே.
பாட்டு போட்டு ஓட்டு கேட்கும் கட்சிகள் இந்த சமூகத்துக்கு செய்த சேவைகளை விட ஆளுநராக இருந்த எமது முஸ்லிம் வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் செய்த சேவைகள் அதிகம் என பிரச்சார குழு மகளிரணி தேசிய அமைப்பாளர் வைத்தியர் ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார்.
அக்கரைப்பற்றில் இன்று பகல் நடைபெற்ற மகளிர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றிய போது…
கடந்த முறை நாம் சிறுபான்மை இன ஒற்றுமையை வலியுறுத்தி ஜனாதிபதியாக மைத்திரியை கொண்டுவந்தோம்.
ஆனால் முந்தைய ஆட்சியை விட இந்த ஆட்சியில் தான் மினுவாங்கொட தாக்குதல் நடத்தி அதிக சொத்துக்கள் சேதமானது.
செய்வதை எல்லாம் செய்துவிட்டு கோத்தாபாயவை குற்றம் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை.
தலைவர் அஷ்ரப் அவர்களின் வழியில் எமது வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பெண்களின் கல்வியறிவு, பாதுகாப்பு, சேவைகள் என்பவற்றில் கரிசனையுடன் செயலாற்றும் திறன் கொண்டவர். தொடர்ந்தும் எமது பெண்களின் உரிமைகள் பறிபோகும் நிலைக்கு நாம் இடம் கொடுக்க முடியாது.
எமது முஸ்லிம் மக்களுடைய வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதியை தீர்மானிக்கும் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். எங்கள் மீது தீவிரவாத முத்திரை குத்தப்பட்டுள்ளது. அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்க நாம் எமது வாக்கை ஒட்டகத்துக்கு வழங்க வேண்டும்.
சமூகத்துக்கு அநீதி நடக்கும் போது ஒற்றுமைபட முடியாத எமது முஸ்லிம் தலைவர்கள் இப்போது அன்னத்தில் ஒற்றுமை பட்டுள்ளார்கள். இவர்களின் ஒற்றுமை நிலைக்காது என்றார்.