சத்தான உணவு:
காய்கறிகள், பழங்கள் மற்றும் கொழுப்புச் சத்து குறைந்த பால் போன்ற சத்துகள் நிறைந்த உணவு எடுத்துக் கொள்வது பல்வேறு நோய்களின் தாக்கத்திலிருந்தும் உங்களைப் பாதுகாக்கும்.
சீரான உடல் எடையைப் பேணுதல்:
உங்கள் உயரத்துக்கு ஏற்ற சீரான உடல் எடையைப் பேணுதல் அவசியம். அதிகப்படியான எடையுடன் இருப்பது மாரடைப்பு வருவதற்கான சாத்தியத்தை அதிகப்படுத்தும். உங்களது பிஎம்ஐ (உயரத்துக்கு ஏற்ற எடை) அறிந்து கொண்டு அதற்கேற்ப எடையை பேணுங்கள்.
அன்றாட உடற்பயிற்சி:
உங்களது வாழ்வுமுறைக்கேற்ப எளிய உடற்பயிற்சிகளை அன்றாடம் மேற்கொள்வது உங்களது ஆரோக்யத்தைப் பேணுவதில் முக்கிய பங்காற்றும்.
புகைப்பழக்கமற்ற வாழ்வு முறை:
புகைப் பிடிக்கும் பழக்கத்தினால் மாரடைப்பு, நுரையீரல் தொடர்பான நோய்கள் மற்றும் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. இதனால் புகைபிடிக்கும் பழக்கம் இல்லாமல் இருப்பது சாலச்சிறந்தது.
சீரான இடைவெளியில் மருத்துவரிடம் ஆலோசனை:
உங்களது உடல்நிலை குறித்து மருத்துவரிடம் சீரான இடைவெளியில் ஆலோசனை செய்துகொள்வது நலம். ரத்ததில் சர்க்கரை அளவு, ரத்தப் பரிசோதனை, கொழுப்பின் அளவு மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை மருத்துவர் கூறிய இடைவெளியில் மேற்கொள்வது அவசியம்.
குடியைக் கெடுக்கும் குடி:
புற்றுநோய், ரத்தக் கொதிப்பு, மனநலம் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு குடிப்பழக்கம் காரணமாக அமைந்துவிடும். எனவே ஆல்கஹால் விவகாரங்களை விட்டு விலகியிருப்பது உங்களது உடல்நலம் மட்டுமல்ல குடும்ப நலனுக்கும் சிறந்தது.
மன அழுத்தத்தைச் சமாளிக்கும் திறன்:
வேலை மற்றும் குடும்பம் ஆகிய 2 சுமைகளையும் திறம்பட சமாளிக்கும் திறனை வளர்த்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும். இதனால் ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து விடுபட தியானம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பது மன அழுத்தத்திலிருந்து உங்களைக் காக்கும்.
போதுமான அளவு உறக்கம்:
தினமும் 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும். தூக்கமின்மை உங்களது அன்றாட பணிகளைப் பாதிப்பதுடன் உங்களின் உடல் நலனையும் கெடுத்துவிடும். மேலும், சுவாசக் கோளாறு மற்றும் விபத்துகள் நடப்பதற்கு தூக்கமின்மையே காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. நீங்கள் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
உடல் நலனில் அக்கறை:
உங்களது வேலை, சுற்றுப்புறச் சூழல் உள்ளிட்டவைகளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வோடு இருங்கள். உதாரணமாக, ரசாயன ஆலைகளில் பணிபுரியும் ஆண்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்வதுண்டு. இதனால் குடும்ப உறுப்பினர்களும் பாதிக்கப்படும் அபாயம் உண்டு.எனவே இதுபோன்ற தருணங்களில் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்பது நல்லது.
விழிப்புடன் இருங்கள்:
ஹெல்மெட் அணிதல், சீட் பெல்ட் அணிதல், பணியிடங்களில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் போன்றவற்றை சரியாக பின்பற்றுங்கள். நலமான வாழ்வு உங்களுக்குக் கிடைக்கட்டும்.