இலங்கையின் வலைப்பந்தாட்ட வீராங்கனை மெலோனி விஜேசிங்க இரத்த புற்றுநோயால் மரணமடைந்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் அகில இலங்கை வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் போது மெலோனிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு இரத்த புற்றுநோய் தீவிரமடைந்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து தொடர் சிகிச்சையில் இருந்த மெலோனி சிகிச்சை பலனின்றி இரண்டு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.
விசாகா கல்லூரி மாணவியான மெலோனி 2017 இல் 8ஆவது இளையோர் வலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியில் இடம்பெற்றிருந்தார்.
சிறந்த கோல் ஷூட்டராக வலம் வந்த மெலோனி உயர் தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்று ஒரு மருத்துவராக ஆவதற்கு கனவு கண்டிருந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.