தெற்காசிய வலைப்பந்து சம்பியன்ஷிப்பில் இலங்கை அணி சம்பியன்

தெற்காசிய நாடுகளுக்கான 16 வயதின் கீழ்ப்பட்டோருக்கான வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில், இலங்கை 16 வயதுக்குட்பட்ட வலைப்பந்து அணி 42-28 என்கிற புள்ளிகள் கணக்கில் இந்திய வலைப்பந்து அணியினை தோற்கடித்து சம்பியன் பட்டம் வென்றிருக்கின்றது.

நேபாளம் கத்மண்டுவில் முதல் தடவையாக நேபாள வலைபந்து சங்கம் ஒழுங்கு செய்திருந்த இந்த வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரை நடைபெற்றது. தொடரில் இலங்கையின் 16 வயதுக்குட்பட்ட வலைப்பந்து அணி உள்ளடங்களாக நேபாளம், பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றின் 16 வயதுக்குட்பட்ட வலைப்பந்து அணிகளும் பங்கெடுத்திருந்தன.

இலங்கையின் பெண்கள் அணி இந்த வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் இறுதிப் போட்டியில் இந்திய 16 வயதுக்குட்பட்ட வலைப்பந்து அணியினை எதிர் கொண்டிருந்தனர். இறுதிப் போட்டி பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் ஆரம்பித்தது. போட்டியின் இறுதிக் கால்பகுதியினை இலங்கை வீராங்கனைகள் 7-8 என்கிற புள்ளிகள் கணக்கில் பறிகொடுத்த போதிலும் ஏற்கனவே நடைபெற்ற கால்பகுதிகளில் பெற்ற புள்ளிகள் இலங்கை அணிக்கு 42-28 வெற்றிக்கு போதுமாக இருந்தது.

இலங்கை 16 வயதுக்குட்பட்ட வலைப்பந்து அணியின் வீராங்கனையான நெத்மி விஜேநாயக்க தொடரில் சிறந்த சூட்டர் வீராங்கனையாக தெரிவாக, பங்களாதேஷின் மிஷ்கா சிறந்த தடுப்பு வீராங்கனையாக தெரிவாகினார்.