ஐந்து தமிழ்க்கட்சிகள் பதின்மூன்று அம்சக் கோரிக்கைகள் அடங்கிய ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு இக்கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் ஜனாதிபதி வேட்பாளருக்கே ஆதரவு என அறிவித்துள்ளமையானது தமிழ் அரசியல் தலைமைகள் குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை காலமும் தமிழ்மக்களை ஏமாற்றி வந்ததன் உச்சக்கட்டமே இது என கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தலைவர் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தோர்தல் குறித்து இன்றைய தினம் (24) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழீழ விடுதலைக்கழகம் (ரெலோ), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, (புளொட்), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) ஆகிய அங்கீகரிக்கப்பட்ட நான்கு அரசியல் கட்சிகளும் இன்னும் தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத தமிழ் மக்கள் கூட்டணியும் ஆக மொத்தம் ஐந்து தமிழ்க்கட்சிகள் பதின்மூன்று அம்சக் கோரிக்கைகள் அடங்கிய ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு இக்கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் ஜனாதிபதி வேட்பாளருக்கே ஆதரவு என அறிவித்துள்ளன. தமிழர்தம் அரசியல் தலைமைகள் குறிப்பாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இதுவரைகாலமும் தமிழ்மக்களை ஏமாற்றி வந்ததன் உச்சக்கட்டமே இது.
எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்று இன்னும் தாங்கள் முடிவெடுக்கவில்லையென்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் கூறி முழுப்பூசணிக்காயையும் சோற்றில் மறைத்துக் கொண்டிருக்க, தமிழ்த்;தேசியக் கூட்டமைப்பின் அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் கோத்தபாயவை ஆதரிக்கும் தமிழ்க் கட்சிகளைத் திட்டித் தீர்த்துக்கொண்டு சஜித்பிறேமதாசாவை ஆதரித்துக் கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள். இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறிக்கொண்டிருப்பதும் மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதும் ‘பொய்’ தானே. ஏன் இந்த ஏமாற்று அரசியல்? தமிழ்த்;தேசியக் கூட்டமைப்பு சஜித்பிறேமதாசாவை அல்லது ஐக்கிய தேசியக்கட்சியை ஆதரிக்கிறது எனப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டியதுதானே.
சரி பிழைக்கு அப்பால் முஸ்லிம் அரசியல் கட்சிகளும், மலையக அரசியல் கட்சிகளும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஈழமக்கள் ஜனநாயக்கட்சி தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் அகில இலங்கை தமிழர் மகாசபை ஆகிய தமிழ் அரசியல் கட்சிகளும் தங்கள் அரசியல் நிலைப்பாட்டைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளன. அதுதான் அரசியல் கண்ணியம் ஆகும். அந்த அரசியல் கண்ணியம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடம் கடுகளவும் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் முழுக்க முழுக்க சந்தர்ப்பவாத அரசியலாகும்.
மேலும் இந்தப் பதின்மூன்று அம்சக்கோரிக்கை விவகாரத்தைத் தர்க்கரீதியாக நோக்கினால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முப்பத்தைந்து வேட்பாளர்களில் சிவாஜிலிங்கத்தைத் தவிர வேறெந்த வேட்பாளரும் இந்தக் கோரிக்கைகளை எழுத்து மூலமோ அல்லது வாய்மொழி மூலமோ ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பது எவரும் இலேசாகப் புரிந்துகொள்ளக் கூடிய எளிய எண்கணிதம் ஆகும். அப்படியாயின் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள ஐந்து கட்சிகளும் சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பதுதானே அரசியல் நேர்மை. அதனை இக்கட்சிகள் கூட்டாகச் செய்யுமா?. அப்படிச் செய்யுமென ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும் கட்சியின் முடிவை மீறி தன்னிச்சையாக முடிவெடுத்து வேட்பாளரான சிவாஜிலிங்கத்தின் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ள ரெலோவின் தலைமைப்பீடம் அதில் இணைந்து கொள்ளுமா?
வெற்றிவாய்ப்பு உள்ளவர்கள் எனக்கருதப்படும் இரு பிரதான வேட்பாளர்களான கோத்தாபாய மற்றும் சஜித் ஆகியோரிடம் மட்டுமே இக்கோரிக்கையை முன்வைத்து இருவருமே அதனை ஏற்றக்கொள்ளவில்லையென்றால் அடுத்த கட்டத் தெரிவு என்ன? இரு பிரதான வேட்பானர்களும் இக்கோரிக்கையை நிராகரித்த பின்பு வாக்குவங்கி வரிசையில் மூன்றாம் இடத்தில் இருப்பதாகக் கருதப்படும் அனுரகுமார திசாநாயகக்கா அதனை ஏற்றுக்கொள்வாரா? அப்படி அவர் ஏற்றுக்கொள்வதாக ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும். வெற்றிவாய்ப்பு இல்லாத அவருக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழர்கள் என்ன நன்மைகளைப் பெற்றுக் கொள்ளப் போகிறார்கள். ஒருவேளை இக்கோரிக்கைகளை அனுரகுமார திசாநாயக்கா ஏற்றுக் கொண்டால் தமிழர்கள் அவரைத்தான் ஆதரிக்கவேண்டும் என்று இந்த ஐந்து கட்சிகளும் பகிரங்கமாகத் தமிழர்களைக் கேட்டுக் கொள்வார்களா? இவை எதுவுமே நடைபெறப் போவதில்லை என்பது அரசியல் அரிச்சுவடி அறிந்த மாணவனுக்குக் கூடத் தெரியும்.
தமிழ்த்;தேசியக் கூட்டமைப்பினர் இறுதித் தருணத்தில்தான் தங்கள் பூனையை அவிழ்ப்பார்கள். ஆம்! சஜித்பிறேமதாசாவை ஆதரிக்கச் சொல்லுவார்கள். அல்லது இவர்கள் சட்டமேதைகளும் அரசியல் சாணக்கியர்களுமல்லவா? சஜித்பிறேமதாசாவை ஆதரிக்கச் சொல்லி நேரடியாகச் செல்லாமல் ‘அரியம் சிந்தனை’யில் உதித்த “தமிழர் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதே முக்கியம்” என்ற 21ம் நூற்றாண்டின் அரிய அரசியல் கண்டுபிடிப்பின் அடிப்படையில் கோத்தாபாயாவுக்கு மட்டும் வாக்களிக்க வேண்டாம் எனவும் சொல்லக்கூடும். இரண்டிலும் தங்கள் ‘சுயலாபக் கட்சி அரசியலுக்கு ஆபத்து உண்டு எனக் கருதினால் ஜனாதிபதித் தேர்தலைப் பகிஸ்கரிக்கும் படி அல்லது மக்களை தாங்களே முடிவெடுக்கும்படி கேட்டுத் தந்நிரமாகத் தப்பித்துக் கொள்ளவும் கூடும். இதில் எதனைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செய்யப்போகிறதோ அது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். தமிழ் மக்கள் ஏமாறத் தயாராக இருக்கும் வரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களை ஏமாற்றிக்கொண்டே இருக்கும். இதுதான் தமிழர்களின் கடந்த எழுபது வருடகால அரசியல் செல்நெறி. இதில் மாற்றம் ஏற்பட்டால் ஒழிய தமிழர்களுக்கு இறங்கு திசைதான் என்று தெரிவித்தார்.