தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர் அளித்த புகாரின் அடிப்படையில் மலையாள இயக்குநர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் மலையாள நடிகை மஞ்சு வாரியர். அவர், கேரள டிஜிபி லோக்நாத் பெஹராவிடம் மலையாள இயக்குநர் ஸ்ரீகுமார் மேனனுக்கு எதிராகப் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது: ஒடியன் பட வெளியீட்டுக்குப் பிறகு சமூகவலைத்தளங்களில் மோசமான எதிர்வினைகள் எனக்கு வருகின்றன. நான் தவிர்க்க நினைத்தாலும் ஸ்ரீகுமார் மேனன் எனக்குத் தொல்லை தருகிறார். அவரும் அவருடைய நண்பர் மாத்யூ சாமுவேலும் எனக்கு எதிராக அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள். ஸ்ரீகுமாரால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சுகிறேன் என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார். மஞ்சு வாரியர் நடித்திருந்த ஒடியன் படத்தை ஸ்ரீகுமார் இயக்கியுள்ளார்.
இதற்கு ஸ்ரீகுமார் தன்னுடைய ஃபேஸ்புக்கில் பதில் அளித்துள்ளதாவது: பத்திரிகைகளின் வழியாக உங்கள் புகாரை அறிந்துகொண்டேன். மஞ்சு வாரியரை நம்ப வேண்டாம் என்று பலரும் கூறினார்கள். திலீப்பை விட்டு பிரிந்தபோது வெறும் ஆயிரத்து ஐநூறு மட்டும் இருப்பதாகச் சொன்னதை மறக்கவில்லை. அப்போது ரூ. 25 லட்சத்தை அளித்து விளம்பர வாய்ப்பை அளித்தேன். அந்த குருவாயூரப்பனே வந்து உதவி செய்வதாக நீங்கள் சொன்னது ஞாபகத்தில் உள்ளது. உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன் எனத் தெரியவில்லை. என் மீதான புகாரைச் சட்டப்படி சந்திப்பேன் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், திருச்சூர் கிழக்கு காவல்துறை, மஞ்சு வாரியர் அளித்த புகாரின் அடிப்படையில் இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.