இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங், டி10 கிரிக்கெட் லீக்கில் மராதா அரேபியா அணிக்காக ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்திய அணியில் சிக்சர் நாயகனாக விளங்கியவர் யுவராஜ் சிங். டி20யில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து மிரட்டிய யுவராஜ் சிங், சமீபத்தில் சர்வதேச மற்றும் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஆனாலும், வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் லீக்கில் விளையாடுவேன் என்று அவர் தெரிவித்தார். பி.சி.சி.ஐயும் அதற்கு அனுமதி அளித்தது.
இந்நிலையில், அபு தாபியில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் டி10 கிரிக்கெட் தொடரில் யுவராஜ் சிங் விளையாட உள்ளார்.
இந்த தொடரில் பங்கேற்கும் மராதா அரேபியன்ஸ் அணியில், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல் ஆகியோர் விளையாட உள்ளனர்.
வெயின் பிராவோ அணித்தலைவராக செயல்படும் இந்த அணியில் தான் யுவராஜ் சிங்கும் விளையாடுகிறார். அணிக்கு பயிற்சியாளராக ஆண்டி பிளவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, கனடாவில் நடந்த டி20 லீக்கில் யுவராஜ் சிங் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.