விஜய் ஹசாரே டிராபி தொடரின் அரையிறுதியில், குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழக அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மாநில அணிகளுக்கான விஜய் ஹசாரே டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் அரையிறுதிப் போட்டி நேற்று பெங்களூரில் நடந்தது. இதில் தமிழ்நாடு-குஜராத் அணிகள் மோதின.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தமிழக அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது. மழை காரணமாக ஆட்டம் தொடங்க தாமதமானது. இதனால் ஆட்டம் தலா 40 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய பார்த்திவ் பட்டேல்(13), பிரியாங் பஞ்சால்(3) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். அதன் பின்னர் களமிறங்கிய மிராய் 20 ஓட்டங்களிலும், துருவ் ராவல் 40 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அக்சர் பட்டேல் 37 ஓட்டங்கள் எடுத்தார். பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர்.
இதனால் அந்த அணி 40 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்கள் எடுத்தது. தமிழக அணி தரப்பில் முகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய தமிழக அணியில், முரளி விஜய் மற்றும் பாபா அப்ரஜித் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் அவுட் ஆகினர். தொடக்க வீரர் அபினவ் முகுந்த் 32 ஓட்டங்கள் எடுத்தார். தமிழக வீரர் விஜய் ஷங்கர் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அணியின் ஸ்கோர் 96 ஆக இருந்தபோது, அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் அபாரமாக விளையாடி 47 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
எனினும் வாஷிங்டன் சுந்தர், ஷாருக் கான் இருவரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இவர்களின் ஆட்டத்தினால் தமிழக அணி 39 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது.
ஷாருக் கான் 56 ஓட்டங்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 27 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் தமிழக அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் கர்நாடக அணியை தமிழக அணி சந்திக்கிறது.