ஹீரோ’ டீசரில் : நீட் தேர்வு.. அனிதா தற்கொலை.. ” டீசரில் இதையெல்லாம் கவனிச்சீங்களா?

ஹீரோ டீசரில் அனிதா தற்கொலை, நீட் தேர்வு சம்மந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சிவகார்த்திகேயன் – பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ஹீரோ.

இப்படத்தின் டீசர் வெளியாகி டிரெண்டிங்காகியுள்ளது. 3 மணி நேரத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் டீசரை பார்த்துள்ளனர். ஹீரோ டீசர் ஸ்டைலிஷாக இருக்கிறது என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். சிவா ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையை சேர்ந்த பலரும் டீசரை பாராட்டி வருகின்றனர்.

டீசரை வெளியிட்ட சல்மான் கானே, ஹீரோ ஸ்டைலிஷாக இருக்கிறது என பாராட்டியுள்ளார். இயக்குனர் பி.எஸ்.மித்ரன் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் படங்களின் டீசர்களிலேயே இது தான் சிறந்த டீசர் என பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் டீசரில் இடம்பெற்ற காட்சிகள் பல்வேறு விஷயங்களை பற்றி குறிப்பிடுகிறது. டீசரின் ஆரம்பத்தில் ஒரு கல்வி கண்காட்சி காட்டப்படுகிறது. அதில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் வைத்திருக்கும் விளம்பரப் பலகைகள் இடம்பெற்றுள்ளன. மாணவர்களின் திறனை அறிவதற்காக கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு, இன்று எப்படி ஒரு பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறிவிட்டது என்பதை உணர்த்துகிறது இந்த காட்சி. மேலும் மாணவர்களை சோதனை செய்யும் காட்சியும் உள்ளது.

இரண்டாவதாக போலி சான்றிதழ்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பதும் டீசரில் காட்டப்பட்டுள்ளது. நவீன முறையில் கல்வி சான்றுகளை உருவாக்கி தருகிறார்கள் என்பதை இந்த காட்சி காட்டுகிறது. இது ஏற்கனவே பல சினிமாக்களில் காட்டப்பட்டது தான்.

ஒரு மாணவி மொபைலில் பேசியபடியே ஒரு கட்டடத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்கிறார். இது திருச்சி மருத்துவ மாணவி அனிதாவின் மரணத்தையே நினைவூட்டுகிறது. எனவே படத்தின் மையக்கருவாக அனிதா மரணம், நீட் தேர்வு தான் இருக்கும் என தெரிகிறது.

அதற்கு அடுத்தடுத்த காட்சிகளில் ஒரு ஸ்டெத்தஸ்கோப் கீழே விழுகிறது. ரத்த வெள்ளத்தில் ஒருவர் ஸ்டெச்சரில் படுத்திருக்கிறார். இது அனைத்துமே நீட் தேர்வையும், அனிதாவையும் குறிப்பதாகவே உள்ளது. ஆக படத்தில் இந்த சம்பவங்கள் தான் ஹீரோவை அநீதிக்கு எதிராக தூண்டும் விஷயங்களாக இருக்கும் என தெரிகிறது.

ஹீரோ கல்விமுறையை பற்றி பேசும் படம் என்பது டீசரின் தொடக்கத்தில் இருந்தே தெரிந்துவிடுகிறது. “திறமையாவது மண்ணாங்கட்டியாவது, இங்க எல்லாத்துக்கும் காசுதான்.. நீட்ட வேண்டியதை நீட்டுனா சீட்டெல்லாம் தானா வரும்”, என்பது உள்ளிட்ட பல பலமான வசனங்கள் படத்தில் இடம்பெற்றிருப்பதை டீசர் காட்டுகிறது.

இரும்புத்திரை படத்தை போலவே இந்த படத்திலும் சரியான சம்பவங்களை வைத்திருக்கிறார் பி.எஸ்.மித்ரன். இரும்புத்திரையில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை கடுமையாக விமர்சித்திருந்தார். அதனால் அப்படத்தின் ரிலீஸ் சமயத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

ஹீரோ படத்தில் அதைவிட சென்சேஷனலான விஷயங்களை எல்லாம் தொட்டிருக்கிறார் மித்ரன். நீட் தேர்வு, அனிதா தற்கொலை ஆகிய விஷயங்களை எல்லாம் பேசியிருக்கிறார். ஆக இந்த படத்திற்கும் இலவச பப்ளிசிட்டி இருக்கும் என்றே தெரிகிறது.