விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருந்ததாக் கூறி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மலேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் சாமிநாதன் மற்றும் குணசேகரன் உள்ளிட்ட 12 நபர்களையும் தீபாவளியை முன்னிட்டு அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் படைத் தலைவர் அப்துல் ஹமிட் படோர் இதனைத் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அந்த 12 பேரும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் அவர்களை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சந்திக்க முடியும் என அவர் சொன்னார். எனினும், இந்த 12 பேர் எங்கு தடுத்து வைக்கப் பட்டுள்ளனர் என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.
தடுத்து வைக்கப்பட்டவர்களைத் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுவிக்கும்படி திங்கட்கிழமை முதல் புக்கிட் அமானில் கூடியிருக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட அந்த 12 பேர் மீதான விசாரணை அறிக்கை சட்டத்துறை தலைவரிடம் மேல் நடவடிக்கைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும்
அப்துல் ஹமிட் தெரிவித்தார். சட்டத்துறைத் தலைவரின் பதிலுக்காகப் பொலிஸார் காத்திருக்கின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு புத்துயிரூட்ட முயன்றதன் தொடர்பில், இம்மாதம் 10 மற்றும் 12ம் திகதிகளில் அந்த 12 பேரையும் பொலிசார் கைது செய்தனர்.
சொஸ்மா சட்டத்தின்கீழ் விசாரணையின்றி 28 நாட்களுக்கு இவர்களைத் தடுத்து வைக்கும் காலகட்டம் நம்பர் 6 மற்றும் 8ம் திகதி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி, அவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.