தீபாவளி அன்று எமனுக்கு தர்ப்பணம் செய்யும் வழக்கம் இன்றும் சிலரால் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் பின்னால் ஒரு சுவாரசியமான புராண காரணம் இருக்கிறது.
அமுதத்துக்காக தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர். திருமால் மோகனி அவதாரம் செய்து, தேவர்களுக்கு அமுதத்தை அளித்தார். இதை உணர்ந்த அசுரர்கள், மகாலட்சுமியை சிறைப்பிடிக்க முனைந்தனர். அவர்களது திட்டத்தை முன்பே அறிந்து யமன், அன்னையிடம் சொல்லி, எச்சரிக்கை செய்தார்.
அதனால் அசுரர்கள் அங்கு வருமுன் அன்னை லட்சுமி, விளக்கில் இருந்த எண்ணெயில் மறைந்து கொண்டாள். பிறகு மகாவிஷ்ணு வந்து அசுரர்களை வதம் செய்து அன்னையைக் கரம் பிடித்தார். கல்யாணக் கோலத்தில் காட்சி அளித்த லட்சுமி நாராயணரை யமனும் வணங்கினான்.
மனம் மகிழ்ந்த மகாலட்சுமி, ‘இன்று உன்னை நினைத்து தர்ப்பணம் செய்பவர்களின் வீடுகளில் உள்ளவர்களுக்கு செல்வத்துக்கு எந்தக் குறைவும் ஏற்படாது. அதோடு அவர்களை நீ என் உத்தரவின்றி பிடிக்கவும் கூடாது’ என்றாள். அன்று முதல் தீபாவளியன்று யம தர்ப்பணம் செய்வதும், அன்னை மகாலட்சுமியை வணங்குவதும் வழக்கமாயின.