கே.சி.எஸ் ஐயர் கணித்த குருப்பெயர்ச்சி பலன்கள் – 2019 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)

ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் கணித்த முதல் நான்கு ராசிகளுக்கான 2019ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்களை படித்து மகிழுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

05.11.2019 முதல் 29.03.2020 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள தக்க பயிற்சிகளைச் செய்வீர்கள். செயல்களில் சுறுசுறுப்பு கூடும். சோம்பலை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சுணங்கி வந்த தடைபட்டு வந்த பல்வேறு விஷயங்களிலும் வெற்றிகரமாக நடைபெற துவங்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். எந்த வியாதி தொல்லையும் ஏற்படாது. குடும்பத்துடன் புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். திடீர் யோகம், வருமானம், அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஆகியவை தேடிவரும். குறிப்பாக, பொருளாதார நிலை மிகவும் சரளமாக இருக்கும். செய்தொழிலில் முன்னேற்றம் சிறப்பாக அமையும். வேறு புதிய தொழிலிலும் ஈடுபட்டு இரட்டை வருவாய்ப் பெற வாய்ப்புகளைப் பெறுவீர்கள். அசையும் அசையாச் சொத்துகள் வாங்கும் யோகமும் உண்டாகும். சிலர் வெளிநாடு சென்று வரும் ராஜயோக பலன்களே நடைபெறும் காலகட்டமாக இது அமைகிறது.

30.03.2020 முதல் 29.06.2020 வரை உள்ள காலகட்டத்தில் நண்பர்களுடன் கூட்டி சேர்ந்து புதிய தொழில்களில் ஈடுபடுவீர்கள். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும். வழக்குகளிலும் சாதகமான திருப்பங்களைக் காண்பீர்கள். உற்றார் உறவினர்கள், நண்பர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். அவர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். சிலர் பழைய வண்டிகளைக் கொடுத்துவிட்டு புதிய வண்டி வாகனங்களை வாங்குவார்கள். புனித தலங்களுக்கும் யாத்திரை செல்வார்கள். பெற்றோருடனும் உடன்பிறந்தோரிடமும் இணக்கமாகப் பழகுவீர்கள். மற்றபடி எதிர்ப்புகளைச் சாதுர்யத்துடன் சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.

30.06.2020 முதல் 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் பாகப்பிரிவினை சுபமாக நடந்தேறும். பூர்வீகச் சொத்துகளிலிருந்து வருவாய் கிட்டும். நெடுநாளாக விற்காமல் இருந்த சொத்தும் நல்ல விலைக்கு விற்கும். வழக்கின் மூலம் நிலம் கைவிட்டுப்போனாலும் அப்பீல் பேரில் மீண்டும் கை வந்து சேர்ந்து விடும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். குழந்தைகளும் வெளியூர், வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு கிட்டும். சமுதாயத்தில் உங்கள் பெயர், கௌரவம், அந்தஸ்து ஆகியவை உயர்ந்த நிலையில் இருக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நிலவிய இணக்கமான சூழ்நிலைகளிலிருந்து விடுபட்டு நிம்மதியைக் காண்பீர்கள். சிலருக்கு புதிய வேலைகள் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களைப் பராட்டும் வகையில் நிலைமை உருவாகும். வியாபாரிகளுக்கு குருபெயர்ச்சி காலத்தில் பல வழிகளில் லாபம் வரும். வியாபாரத்தில் புதிய வளர்ச்சியைக் காண்பீர்கள். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பழைய கடன்களைத் திருப்பி அடைப்பீர்கள். புதிய முதலீடுகளை இந்த காலத்தில் செய்ய வேண்டாம். எவருக்கும் உங்கள் பெயரில் பணம் வாங்கிக் கொடுப்பதோ ஜாமீன் போடுவதோ கூடாது. விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருந்தாலும் கொள்முதல் விற்பனை சீராக இராது. பூச்சி மருந்து, கால்நடைகளுக்கு செலவு செய்வீர்கள். பழைய குத்தகை பாக்கிகள் வசூலாகும்.

அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். கட்சி மேலிடம் உங்கள் கோரிக்கைகளை கருணையுடன் பரிசீலிக்கும். அரசாங்க அதிகாரிகளால் சில நன்மைகளையும் பெறுவீர்கள். கலைத்துறையினரின் முயற்சிகள் அனைத்தும் நிறைவேறும். செயல்கள் அனைத்தும் மக்களைக் கவரும் விதத்தில் அமையும். இந்த காலகட்டத்தில் செயல்களில் தனி முத்திரையை பதிப்பீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பெண்மணிகள் இந்த குருபெயர்ச்சி காலத்தல் விரக்தியிலிருந்து விடுபடுவார்கள். நாடி வரும் உறவினர்களுக்கு தயங்காமல் உதவி செய்வீர்கள். குடும்பத்தினரிடம் அன்பைப் பெறுவீர்கள். பிறரிடம் பேசும்போது கவனமாக இருக்கவும். மாணவமணிகள் படிப்பில் அக்கறை காட்டுவார்கள். விளையாடும் நேரங்களில் கவனமாக இருக்கவும். ஆசிரியர்களிடம் மரியாதையாக நடந்துகொள்வதால் இந்த குருபெயர்ச்சியில் எல்லாமே நல்லதாக நடக்கப் போகின்றது.

பரிகாரம்: “ராமபக்த’ அனுமனை வழிபட்டு வரவும்.

ரிஷபம் (கார்த்திகை 2-ஆம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

05.11.2019 முதல் 29.03.2020 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் விரும்பத் தகுந்த மாற்றங்களைக் காண்பீர்கள். மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள். பெரியோர்களை மதித்து நடப்பீர்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். சிலருக்கு பட்டம், பதவி, பரிசு விருது முதலியன கிடைக்கவும் யோகமுண்டாகும். மனக்கட்டுபாட்டுடன் நடந்து கொள்வீர்கள். உற்றார் உறவினர்கள் நண்பர்களிடம் கவனமாகப் பேசுவீர்கள். செய்தொழிலுக்கேற்றவாறு உங்கள் தகுதிகளை உயர்த்திக் கொள்வீர்கள். வருமானமும் எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்கும். அரசாங்க உதவியும் பெரும்பாலோருக்குக் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வீண்விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் செலவு செய்யும் நேரத்தில் கவனமாக இருக்கவும்.

30.03.2020 முதல் 29.06.2020 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீர்ந்து விடும். பொருளாதாரத்தில் நெருக்கடி என்று எதுவும் ஏற்படாது. கடினமான நிலைமைகளை உங்கள் சமயோசித புத்தியால் பக்குவமாகச் சமாளிப்பீர்கள். விடாமுயற்சியுடன் உங்கள் காரியங்களைச் செய்து வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக அமையும். குடும்பத்தில் சுணங்கி வந்த சுபகாரியங்களெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறத் தொடங்கும். பழைய கடன்களைத் திருப்பி அடைத்துவிடும் காலகட்டமாக இது அமைகிறது.

30.06.2020 முதல் 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழில் சம்பந்தமாக கடன் வாங்கி நிலைமையை சமாளிப்பீர்கள். சிலர் நூதன முயற்சியில் ஈடுபடுவார்கள். புதிய தொழில்களிலும் நண்பர்களின் உதவியுடன் ஈடுபடுவார்கள். நெடுநாள்களாக குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தவர்கள் குடும்பத்துடன் இணைவார்கள். சிலர் வெளியூர் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள். கணவர்} மனைவி வழி உறவினர்களின் ஆதரவும் கிடைக்கும். கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்துக்கொண்டு அரசாங்கத்திலிருந்து எந்தப் பிரச்னையும் ஏற்படாமல் உங்களைக் காப்பாற்றிக் கொள்வீர்கள். வழக்குகளிலும் சாதகமான திருப்பங்களை எதிர்பார்க்க முடியாததால் நீண்ட வாய்தாக்களை வாங்கிக் கொள்ளவும். புனிதத் தலங்களுக்கு யாத்திரை சென்று வரும் பாக்கியமும் உண்டாகும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த குருபெயர்ச்சியினால் அனைத்து வேலைகளும் திட்டமிட்டதுபோல் முடியும். உழைப்புக்கேற்ற ஊதியமும் கிடைக்கும். உங்கள் பணிகளில் மேலதிகாரிகள் திருப்தி அடைவார்கள். அலுவலகத்தில் மறைமுக எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடும். சக ஊழியர்களிடம் ரகசியங்களைக் கூறவேண்டாம். வேலைகளை தேங்க வைக்காமல் உடனுக்குடன் முடிக்கவும். வீட்டு கடன்கள் கிடைக்கும். புதிய இல்லத்திற்கு மாறுவீர்கள். வியாபாரிகளுக்கு சிக்கல்களைத் தாண்டி சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். வருமானம் பலவகையிலும் உங்களைத் தேடிவரும். செலவு செய்யும் நேரத்தில் கவனமாக இருக்கவும். பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரிகளுக்கு சிக்கல்களைத் தாண்டி சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். பழைய கடன்கள் வசூலாகும். விவசாயிகளுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். தானியப் பொருள்கள் விற்பனையில் நல்ல லாபம் பெறுவீர்கள். புதிய கால்நடைகளை வாங்கிப் பலன் பெறலாம். புதிய குத்தகைகள் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு இந்த குருபெயர்ச்சியில் கட்சியின் மதிப்பு மரியாதை உயரும். அனைத்து வேலைகளையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பர். எதிர்கட்சியினரிடம் அநாவசிய நெருக்கம் வேண்டாம். செயல்கள் எதிர்பார்த்த திருப்பங்களை ஏற்படுத்தும். தொண்டர்களை அரவணைத்துச் செல்லவும். கலைத்துறையினருக்கு குருபெயர்ச்சியில் எதிர்பார்த்த அதிர்ஷ்டகரமான திருப்பங்கள் ஏற்படும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த சூழ்நிலை உருவாகும். பயணங்களால் நன்மை உண்டு. பெண்மணிகள் உற்றார் உறவினர்களைச் சந்தித்து மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவமணிகள்
அதிகம் உழைத்து படிப்பதின் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். சிலருக்கு வெளியிலும் சென்று கல்வி பயிலும் வாய்ப்புகள் கிடைக்கும்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.

மிதுனம் (மிருகசீரிஷம்3ஆம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

05.11.2019 முதல் 29.03.2020 வரை உள்ள காலகட்டத்தில் சிறப்பான செயல்களைச் செய்வதால் வாழ்க்கைத்தரம் உயரும். செய்தொழிலில் பெரியதொரு முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரம் உயர்ந்த நிலையில் இருக்கும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். நெடுநாளாக வாட்டி வதைத்த உடலுபாதைகளிலிருந்து முழுவதுமாக விடுபட்டு விடுவீர்கள். சிலர் கண் புறை நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொள்வார்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சிலருக்கு தங்கள் விருப்பம் போல் திருமணம் நடக்கும். குடும்பத்தில் சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் பாகப்பிரிவினை உண்டாகும். உடன்பிறந்தோருக்கும் உங்களால் ஆன உதவிகளைச் செய்வீர்கள். சிலருக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகளும் கிடைக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். பேச்சில் முதிர்ச்சி ஏற்படும். எதிரிகளின் செயல்களை முன்கூட்டியே புரிந்துகொண்டு அதற்கேற்ப உங்கள் செயல்முறைகளை மாற்றிக் கொண்டு வெற்றியடைவீர்கள் என்றால் மிகையாகாது.

30.03.2020 முதல் 29.06.2020 வரை உள்ள காலகட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கும் நேரத்தில் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு எடுப்பீர்கள். சில நேரங்களில் நண்பர்களின் அவமதிப்புக்கு உள்ளாக நேரிடும். சிலருக்கு ரத்த அழுத்தம் உயரும். இதயம் சம்பந்தமான சிறு உபாதைகளும் ஏற்படலாம். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள்கிடைக்காமல் போகும். அரசாங்க விஷயங்களில் தர்மசங்கடமான சூழ்நிலைகளையும் சந்திக்க நேரிடும். உங்கள் ரகசியங்களை புதியவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். ” கொக்குக்கு ஒன்றே மதி’ என்கிற ரீதியில் காரியங்களைச் செய்து வரவேண்டிய காலகட்டமிது.

30.06.2020 முதல் 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் காரியங்களை நேரடியாகச் செய்து கச்சிதமாக முடித்து விடுவீர்கள். தாமதித்திருந்த பணம் உங்கள் கைவந்து சேரும். உற்றார் உறவினர்களும் நண்பர்களை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். செய்தொழிலில் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். சமுதாயத்தில் மதிப்பு மரியாதை உயரும். பெற்றோர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பயணங்களில் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். தன்னம்பிக்கை கூடும். பேச்சில் நிதானத்துடனும் உறுதியுடனும் சொற்களை உபயோகிப்பீர்கள் என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு குறைந்த உழைப்பால் அதிக பலன் கிடைக்கும். மேலதிகாரிகள் பணித்திறமையை பாராட்டுவார்கள். சக ஊழியர்களின் உதவியுடன் உங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அலுவலகத்தில் புதிய சலுகைகளைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் இந்த குருபெயர்ச்சியில் மதிப்பு மரியாதை உயரும். காலநேரத்தை வீணாக்காமல் உழைத்தால் இன்னும் உயரிய பதவிகளைப் பெறுவீர்கள். இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக பணவருவாயைக் காண்பீர்கள். வியாபாரிகள் தீட்டிய திட்டங்கள் செயல்வடிவம் பெற தாமதமாகும். கூட்டாளிகளை கலந்தாலோசிக்காமல் எந்தச் செயலையும் செய்ய வேண்டாம். கடன்களை குறித்த காலத்தில் திருப்பிச் செலுத்தும் ஆற்றல் உண்டாகும். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் அதிகரிக்கும்.

கால்நடைகளை வாங்கி மகிழ்வீர்கள். பாசனத்துறையில் கூடுதல் கவனம் செலுத்தவும். விவசாயத்துக்கான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் வருமானம் சீராக இருந்தாலும் வழக்கு விஷயங்களுக்குச் சிறிது செலவு செய்ய நேரிடும். உங்கள் எண்ணங்கள் சரியான காலகட்டத்தில் பயனளிக்கும். மக்களின் சரியான தேவைகளுக்குக்காக மட்டுமே பாடுபட்டு நற்பெயர் எடுக்க வேண்டும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகளுக்கு கடும்போட்டிக்குப்பிறகே பெறமுடியும். உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள். சச்சரவை ஏற்படுத்தும் விஷயங்களில் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். யாரிடமும் வெளிப்படையாகப் பழக வேண்டாம். வருமானத்தைப் பெருக்குவதற்கான வழிமுறைகளைத் தேடுவீர்கள்.

பெண்மணிகள் குடும்பத்தில் இணக்கமான சூழ்நிலைகளைக் காண்பார்கள். கணவரிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். மாணவமணிகள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். விளையாட்டுகளில் வெற்றி பெற்று பரிசுகளை அள்ளுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும்.

கடகம் (புனர்பூசம்4-ஆம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

05.11.2019 முதல் 29.03.2020 வரை உள்ள காலகட்டத்தில் கடின முயற்சியின்பேரில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் செயல்களில் நிர்வாகத்திறமை பளிச்சிடும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆலய திருப்பணிகளிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். அதிக வட்டிக்கு வாங்கிய கடன்களை திட்டமிட்டு அடைத்து விடுவீர்கள். பொருளாதாரம் ஏற்றத்தாழ்வாக இருந்தாலும் முக்கிய தேவைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது. புதிய வாய்ப்புகளை பெரியோரின் சிபாரிசின் பேரில் பெறுவீர்கள். எவரையும் நேரடியாகப் பகைத்துக் கொள்ளாமல் இடம் பொருள் ஏவல் அறிந்து பேசிப் பழகுவீர்கள். உங்கள் முயற்சிகளில் அநாவசிய வேகம் வேண்டாம். குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபட ஊக்குவிப்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அவர்களை உங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தவர்கள் உங்கள் மதித்து பேசும் காலகட்டமாக இது அமைகிறது.

30.03.2020 முதல் 29.06.2020 வரை உள்ள காலகட்டத்தில் அதிகம் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்து அதனால் பெருமை அடைவீர்கள். அனைவரிடமும் நயந்து அனுசரித்துச் சென்று காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். எவரும் சூழ்ச்சியால் வெல்ல முடியாது. எதிரிகளின் எண்ணங்களை புரிந்துகொண்டு அவர்களிடமிருந்து விலகி விடுவீர்கள். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களில் நல்ல வரவேற்பையும் பெறுவீர்கள். பொருளாதாரம் படிப்படியாக உயரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். யோகா, பிராணாயாமம் ஆகியவைகளைக் கற்றுக் கொள்வீர்கள். குழந்தைகளுக்குத் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடந்தேறும்.

30.06.2020 முதல் 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் செயல்களை ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்வீர்கள். மற்றவர்களுக்கும் அனாவசியமாக அறிவுரை கூறமாட்டீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்தாலும் அவர்களால் சிறு பிரச்னைகள் உண்டாகலாம். உங்கள் முகத்தில் வசீகரமும் நடையில் மிடுக்கும் உண்டாகும். வீடுகட்டுவது போன்ற விஷயங்கள் தள்ளிப்போடவும். உற்றார் உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். அவர்களுடன் மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழிப்பீர்கள். குடும்பத்திலும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பெற்றோர்களுடன் இணக்கமாக இருப்பீர்கள். அவர்களின் மருத்துவச் செலவுகளும் குறையும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உடலுழைப்பை அதிகரித்துக் கொண்டு வெற்றி வரப்போகும் காலகட்டமாக இது அமைகிறது.

உத்தியோகஸ்தர்கள் இந்த குருபெயர்ச்சியில் அனைவரிடமும் சுமுகமாகப் பழகுவீர்கள். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். அலுவலக பயணங்களாலும் ஓரளவு நன்மை உண்டாகும். தடைப்பட்டிருந்த ஊதிய உயர்வு கிடைக்கும். உடலில் சிறிது சோர்வு காணப்படுவதால் சுறுசுறுப்பு குறையும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களைச் சிறப்பாக முடிப்பீர்கள். கூடுதல் அக்கறையோடு வியாபாரத்தைச் செய்வீர்கள். ஓய்வில்லாமல் உழைத்து லாபத்தை அள்ளுவீர்கள். வியாபாரத்தைப் பெருக்கும் எண்ணத்தில் அதிகமாக கடன்கொடுத்து பணச்சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். விவசாயிகளுக்கு கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும். கால்நடைகளை வைத்திருப்போர் எதிர்பார்த்த லாபத்தை அடைவர். உழைப்பிற்கேற்ற பலனடைவதால் நிறைய கஷ்டப்பட வேண்டியிருக்கும். நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்திக் கொள்ள முயற்சிகளைச் செய்வீர்கள்.

அரசியல்வாதிகள் பொறுப்புடன் நடந்துகொண்டு தங்கள் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வார்கள். செயல்களை துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். கட்சியில் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வதன் மூலம் சில தடைகள் ஏற்படலாம். வருமானம் சீராக இருப்பதால் ரசிகர் மன்றங்களுக்கும் சிறிது செலவுகள் செய்ய நேரிடலாம். பெண்மணிகள் குருபெயர்ச்சியினால் பொருளாதார வளத்தால் திருப்தி அடைவீர்கள். குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். குழந்தைக்கான கடமைகளைச் செய்வீர்கள். கணவரிடம் ஒற்றுமையோடு பழகுவீர்கள். மாணவமணிகள் தவறான வழியிலிருந்து திருத்திக்கொண்டு படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். பெற்றோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்து கொள்வார்கள்.

பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.

(தொடரும்)